உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 67

          நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
          அல்லற் படுவ தெவன்?

என்று வள்ளுவம் கூறும், தீதும் நன்றும் கண்டு நோதலும் தணிதலும் வேண்டா என்று புறநானூறு கூறும். ஆன்மிகத்தில் வளர்ந்த மாமனிதர்கள் துன்பங்களில் உழலும்பொழுதும் தம் நிலையில் பிறழார்; திரியார். கரை தவறி விழுவதால் கடல் கலங்கி விடுமா என்ன? ஒருபொழுதும் கடல் கலங்காது. சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவோர் துன்பங்களினால் நிலை கலங்கார். அவர்கள் இன்பம் விழைதல் இல்லை! துன்பம் இயற்கை என்று எண்ணுவர். இத்தகு வாழ்வியலையே இருவினை ஒத்தல் என்று சமயவியல் கூறும்.

துன்பங்களுக்காகத் துக்கப்படுதல் விலங்கியல்பு ஆகும். துன்பம் நல்லுணர்வு கொளுத்துவதற்காகவே கிடைத்த சாதனம் என்று சான்றோர் கருதுவர். நல்லதாக நடந்த ஒரு காரியத்திற்குப் பலர் தம்மைக் காரணமாக்கி மகிழ்வர்; பெருமைப்படுவர். அதே போழ்து ஒன்று தீமையாகிவிட்டால்- துன்பமாகிவிட்டால் பழியைப் பலர்மீது தூக்கிப் போடுவர்; விதியை நொந்து கொள்வர். ஏன் இந்த இரட்டை நிலை? நன்மையும் தீமையும் ஏன் ஆன்மாவைப் பாதிக்க வேண்டும்? பானை சுடலாம். பாலை நேரே சுட வைக்க இயலுமா?

நன்மையையும் தீமையையும் அனுபவிக்கும்பொழுது சமநிலையாகப் பாவித்தல், விருப்பு- வெறுப்புக்கள், காய்தல்- உவத்தல் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெறுதல்- இருவினை ஒத்தலாகும்.

மாணிக்கவாசகர் முதலமைச்சராக இருந்தபொழுதும் அரச தண்டனைக்கு ஆளாகிய் நிலையிலும் சம நிலையில் இருந்தார். அதனாலேயே "நன்றே செய்வாய்; பிழை செய்வாய்! நானோ இதற்கு நாயகமே!" என்றார். மாணிக்கவாசகர் அவர்தம் வாழ்நிலையில் அடைந்த