ஆ, அதிசயம்! நினைப்பிற்கு எட்டாததாக நடப்பது அதிசயம்! எதிர்பார்ப்பு இல்லாமல் நடப்பது அதிசயம்! அதிசயம் வியப்பில் ஆழ்த்துவது! அனுபவிப்பவனை அதிர்ச்சிக்குள்ளாக்குவது அதிசயம்! புரவலன்போலத் தோற்றமுடையோன் இரவலன் போல நடந்து கொள்ளுதல் இயல்பாக நிக்ழாத ஒன்று. ஆதலால், அதிசயம்! ஏன் பணமும் பதவியும் மனிதனைப் போதைக்கு இரையாக்கித் தலைகீழாகவே நடக்கச் செய்யும் மாறு பட்ட ஒன்று அதிசயம்! இன்றோ மனிதன் மனிதனாக நடந்துகொள்ளுதலே அதிசயக் காட்சியாகி விடுகிறது!
மாணிக்கவாசகர் வரலாற்றில் அதிசயங்கள் பல நடந்தன! நரிகள் பரிகளானது அதிசயம்தானே! தேவர்கோ அறியாத தேவன் கொற்றாளாய் வந்து மண் சுமந்தது அதிசயம்தானே! யாவரும் விரும்பும் அமைச்சுப் பதவியை மாணிக்கவாசகர் நச்சாது அருளாளரானது அதிசயம் தானே! வான்பழித்து இம் மண் புகுந்து இறைவனால் மாணிக்கவாசகர் ஆட்கொள்ளப் பெற்றதும் அதிசயம் தானே! இனிய தமிழ், இன்பத் தமிழ் தேனூறும் திருவாசகமாக என்புருக்கும் பாடல்களாக அமைந்தமையும் அதிசயம் தானே! இறைவனின் கருணையை இனந்தெரியாத உணர்வில் மாணிக்கவாசகர் அனுபவித்ததின் விளைவு அதிசயப்பத்து.