பக்கம்:திருவாசகத்தேன்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 85

'நீதி’ என்றால் என்ன?, மகவெனப் பல்லுயிரும் ஒக்கப் பார்த்து ஒழுகுதல் நீதி விருப்பு- வெறுப்புக்களைக் கடந்து யார் மாட்டும் ஒத்த நிலையில் பழகுதல் நீதி! அவரவர்க்குரியன கிடைக்குமாறு செய்தல் நீதி! கொள்வனவும் கொடுப்பனவும் மிகைபடாமலும் குறைவு படாமலும் நிகழ்வது நீதி அகனமர்ந்த ஒழுகுமுறை நீதி! இன்பம்- துன்பம் இவற்றினால் பாதிக்கப்படாமல் ஒரு நிலையாய் நிற்றல்- ஒழுகுதல் நீதி நீதி- குணம் நீதிக் குணம் மேவிச் செயலில் பொதுமை பொதுளல் நீதி சார்ந்த வாழ்க்கை. நீதியே உலகத்தின் நியதிகளை, முறைமைகளைத் தோற்றுவிக்கின்றது. இயற்கையாய் அமைந்த நீதியிலிருந்தே அரச நீதிகள் பிறந்தன. ஆனால் இயற்கையாய் அமைந்துள்ள நீதியை அரச நீதிகள் பிறழ்ந்த வரலாறுகள் உண்டு. இயற்கையாய் அமைந்த நீதி யாண்டும் மாறியதில்லை!

மனித குலம் தொடக்கத்தில் நீதியைச் சார்ந்து வாழ்ந் திருக்க வேண்டும். அப்போது கூட்டு வாழ்க்கையும் கூட்டு உழைப்பும் இருந்தன; ஆக்கிரமிப்புக்கள் இல்லை; சுரண்டல் இல்லை. ஆதலால் ஆதிகாலத்தில் மனித வாழ்க்கையில் நீதி இருந்தது. மனிதனின் உடல் வலிமை வளர, வளர, புத்திக் கூர்மை வள்ர வளர நீதி கெட்டது. பாபக் கழுவாய், முறைகள் தோன்றியதன் விளைவாக பாபங்கள் பெருகிவளர்ந்தன. கடவுளுடன் பேரம் பேசலாம் என்ற நிலை, நீதியை தாழ்த்திவிட்டது. இன்று மனிதன் நீதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. தனது வாழ்க்கைக்கு இசைந்தது எதுவோ அதுவே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கை நியதிகளுக்கும் நீதிகளுக்கும் சட்டங்கள் மாறுபடுகின்றன. ஏன்? மனிதனின் பலவீனத்திலிருந்தே சட்டங்கள் தோன்றின. அந்தச் சட்டங்களையும் மனிதன் இன்றுமதிக்கத் தவறுகின்றான்.

இன்று எது நீதி அவரவரும் நினைத்துக் கொண்டிருப்பதே 'நீதி' என்று கருதுகின்றனர். இன்று எங்கு