பக்கம்:திருவாசகத்தேன்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

நோக்கினாலும் நீதிக்கும் இயற்கை நியதிக்கும் முரண் பட்டவையே நீதியாகக் கருதப்படுகின்றன. பண்டு உலகத்தை இயக்கியது "வல்லாண்மை"யேயாம்!. வல்லாண்மையுடையது வாழும். இது நியதி, நீதி: ஆனால், இயற்கையாய் அமைந்த சமயஞ்சார்ந்த நீதி, வல்லார்க்கு மட்டுமல்ல வாழ்வு, வல்லாண்மை இல்லா தாருக்கும் வாழ்வுண்டு, உரிமையுண்டு என்பதே. நீதிக்கு வேற்றுமை இல்லை; எல்லை இல்லை: காய்தல் இல்லைஉவத்தல் இல்லை! நீதி சார்ந்த வாழ்க்கைமுறை இன்பந்: தரும். இந்த வையகத்திற்கு இன்றையத் தேவை நீதி சார்ந்த வாழ்க்கை முறையே!

சிவநெறி- சைவ நெறி தொன்மையானது. ஆதலால், 'சிவநெறி போற்றும் சிவன், நீதியாய் நிற்பவன்! இன்று பணம் பத்தும் செய்கிறது! இன்று பணத்தினால் விலைக்கு வாங்கமுடியாதது ஒன்றில்லை! பணமும் அறிவுக் கூர்மையும் இன்று உலகத்தையே ஆட்டிப்படைக்கின்றன. பணமும் அரம்போல் கூர்மையான அறிவும் உடையவர்கள் இன்று நீதியையே விலை பேசுகின்றனர். ஆனால், சிவநெறி இயல்பு இதற்கு முரணானது.

சிவபெருமான் நீதியே வடிவமானவன்! சிவ பெருமானை பணபலமுடைய திருமால் தேடியும் காண முடியவில்லை; நான்கு வேதங்களின் தலைவனாக அறிவின் சின்னமாக விளங்கும் நான்முகனாலும் தேடிக் காண இயலவில்லை! ஆனால், திருவாரூரில் பரவையார் வீட்டு வாயிற்படிகளில் சிவபெருமான் திருவடிகள் தோய்ந்தன. ஆதலால் கடவுள் ஆற்றல்மிக்க அன்புவலையில் படுவோன்; பக்தி வலையில் படுவோன்! இதனைத் திருவாசகம்,

          "பங்கயத்து அயனும் மால் அறியா
          நீதியே"

என்பதால் அறியலாம்.