பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 99


லிருந்து விடுபட்ட பின்னர், அடியார் கூட்டமும் இறையனுபவமும் கிடைத்தன. இப்பொழுது அடியார் கூட்டம் இல்லை. இவர் வாழ்வுமுறை மாறிவிட்டதை அறிந்த அதிகார வர்க்கமும் இவரைவிட்டு நீங்கிவிட்டது; புறத்தே தனிமை சூழ்ந்துவிட்டது. அனுபவம் மீட்டு வாராமையால் அகத்தேயும் தனிமை சூழ்ந்துவிட்டது. அந்த நிலையில் ‘தமியனேன் தனிமை' தீர்த்து (மீட்டும்) தருக நின் பாதம் என்று வேண்டுகிறார்.

இறைவனின் பாதம்மட்டும் கிடைத்தால் அகத்தனிமை, புறத் தனிமை என்ற இரண்டும் நீங்கிவிடும் என்ற மிக நுண்மையான கருத்து, இப்பாடலிற் பொதிந்துள்ளமை நோக்கற்குரியது. அதாவது, இறைவன் திருவடியால் அகத் தனிமை போய்விடுகிறது. திருவடி சம்பந்தம் கிடைத்தவுடன் உலகிலுள்ள பொருள்கள் அனைத்தும் இறை சொரூப மாகவே காட்சி அளித்தலின் புறத் தனிமையும் இல்லை என்க.

73.

தீர்ந்த அன்பாய அன்பர்க்கு
     அவரினும் அன்ப போற்றி
பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு
     அருளிடும் பெருமை போற்றி
வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு
     அமுதம் ஈ வள்ளல் போற்றி
ஆர்ந்த நின் பாதம் நாயேற்கு
     அருளிட வேண்டும் போற்றி 69

தீர்ந்த அன்பு-முறுகிவளர்ந்த தலையன்பு. வார்ந்த-ஒழுகிய.

இப்பாடலின் இரண்டாவது அடியில் வரும் 'பேர்ந்தும் என் பொய்ம்மை ஆட்கொண்டு அருளிட வேண்டும்’ என்ற தொடர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒரு பகுதியாகும். மெய்யான வாழ்க்கையை விட்டுப் பல காலம் பொய்யான உலக வாழ்க்கையில் ஈடுபட்டதையே