பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நீண்ட பாடல்களே பொருத்தம் உடையனவாகும். வெண்பா, குறட்பாப் போன்றவை கருத்தைச் சொல்லப் பயன்படுமே.தவிர, உணர்ச்சியை வெளியிடப் போதுமானவையல்ல. சங்கப் பாடல்களில் உணர்ச்சியை வெளியிட ஆசிரியப்பா, கலிப்பா என்ற இரண்டும் பயன்படுத்தப் பெற்றுள்ளன. நற்றிணை முதலிய நூல்களில் காணப்பெறும் ஆசிரியப்பா சிறந்த கருத்துக்களை வெளியிடினும் உணர்ச்சிகளுள் சிறந்ததாகிய காதல் உணர்ச்சியை முழுதும் வெளியிடுமாறில்லை. ஆனால், நெய்தற் கலியிலும் மருதக் கலியிலும் வருகின்ற நீண்ட பாடல்கள் மிகச் சிறந்த முறையில் உணர்ச்சியை வெளியிடுகின்றன.

பக்தி உணர்ச்சியும் உணர்ச்சிகளில் சிறந்ததாகலின் அதனை வெளியிடக் கட்டளைக் கலித்துறை, கலிவிருத்தம், எண்சீர் விருத்தம் ஆகியவை ஏற்புடையவை. இந்தக் கருத்திலேயே திருவாசகம் இவ்வகைப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளது. தேவார காலத்தில் எழுந்த இசைப் பாக்கள், இசையை அடிப்படையாகக் கொண்டு பக்தியைத் தோற்றுவித்தன. திருவாசகம் இசைப்பா அன்று என்றாலும், நாலு சீர், ஆறு சீர், எட்டுச் சீர் என்று இசைப் பாக்களில் வருவதுபோலச் சீர்களை ஏற்றுக்கொண்டாலும் தேர்ந்தெடுத்த சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் பக்தி உணர்ச்சிக்குத் தலையாய இடம் தந்தது.

நூறு பாடல்களுடன் அந்தாதியாகத் தொகுக்கப்பட்டிருத்தலின் திருச்சதகம் என்ற பெயரை முன்னோர் வழங்கினர்போலும், சதகம் என்று கூறினால் ஒரே வகையான பாட்டுக்கள் நூறு அமைந்திருப்பதே முறையாகும். ஆனால், திருவாசகத்தில் உள்ள திருச்சதகத்தில் கட்டளைக் கலித்துறை, தரவு கொச்சகம், எண்சீர் விருத்தம், அறுசீர் விருத்தம், கலி விருத்தம் என்பன போன்ற வேறுபாடுகளுடன் கூடிய பாடல்கள் பத்துப்