பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 107


‘ஐயனே! சொல் செல்ல முடியாத அளவிற்கு மனம் செல்லுமேனும் அச்சொல்லாலோ அன்றி மனத்தாலோ நின்னைக் காண்பதும் எய்துவதும் அரிதாகும். உன்னைப் பற்றிச் சொல்லப்பெறுகின்ற சொற்கள்கூடப் பிறர் கூறுவதைக் கேட்டுக் சொல்லப்பட்டனவே தவிர, நேரடியாக அறிந்து சொல்லப்பட்டவை அல்ல. ஐம்பொறிகள் என்று எடுத்துக்கொண்டால், அவையும் அவற்றோடு ஒட்டிய புலன்களும் நின்னை என்றும் நெருங்கமாட்டா. ஐயனே நின் பாதம் எத்தன்மைத்து, எங்குளது, யான் அதனை அடையுமாறு எங்ஙனே? உன்னிடத்திலன்றி எனக்கு உய்தி இல்லை. வஞ்சமும் பாவமும் மிகுந்த என் துன்பத்தை அறிந்து, நீயாக மனம் இரங்கி என்னைப் பாதுகாப்பாயாக. அப்படிச் செய்யாவிடின் நான் உன்னோடு ஒன்ற வாய்ப்பே இருக்காது. ஆனால், திருவடியைக் காண வேண்டும் என்ற எண்ணம் ஓயாது மனத்திடை இருக்குமே யாயின் என்றாவது ஒரு நாள் அவ்வெண்ணம் கைகூடும்’ என்கிறார்.


81.

எய்தல் ஆவது என்று நின்னை
     எம்பிரான் இவ் வஞ்சனேற்கு
உய்தல் ஆவது உன்கண் அன்றி
      மற்று ஓர் உண்மை இன்மையின்
பைதல் ஆவது என்று பாது
     காத்து இரங்கு பாவியேற்கு
ஈது அலாது நின் கண் ஒன்றும்
     வண்ணம் இல்லை ஈசனே 77


உய்தல்-பிறவித் துன்பம் நீங்கித் திருவடிக்கண் இன்புறுதல். பைதல்-துன்பம். ஒன்றும் வண்ணம்-பொருந்தும் படியாக.

ஐயனே! நான் உன்னை அடைவது எப்போது? ஏனென்றால் நான் உய்ய வேண்டுமானால் இது தவிர வேறு வழியே இல்லை. பாவியேனாகிய எனக்குத் துன்பம் மிகுந்துள்ளது என்பதை அறிந்து என்னைப் பாது-