பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 109


இவற்றையெல்லாம் தந்தாய். இவற்றை வைத்துக்கொண்டு நன்முறையில் செயற்படுத்தி உன்னை அடைய முயன்று இருக்க வேண்டும். ஆனால், இம்முயற்சியில் ஈடுபடாமல், நீயாக வந்து என்னை ஆட்கொள்கின்றவரையில் நின்னை அடைதற்கு எவ்வித முயற்சியும் செய்யாத மூர்க்கனாகிய நான் தீயில் விழுந்திருக்க வேண்டும். நாணத்தால் உள்ளம் வெடித்திருக்க வேண்டும். அவற்றையும் செய்யவில்லை.

‘திருப்பெருந்துறையில் நீ ஆட்கொண்ட பிறகுதான் அதுவரையில் நின்னை அடைய முயலாமல் என் வாழ்நாளில் பெரும்பகுதியை வீணே கழித்துவிட்டேன் என்று நினைத்துப் பார்க்க முடிகிறது.

‘இப்பொழுது உன்னைவிட்டுப் பிரிந்து நின்றாலும், எந்தை! இன்றில்லாவிடினும் நாளை நின்னை எய்தலுற்று இருப்பேன் என்ற உறுதிப்பாடுடையேன்' என்கிறார்.

‘எந்தை நின்னை எய்திடாத காலம்' என்று சொல்வது எய்திய நிலையில் நின்று இதுவரை வீணாகக் கழிந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்த்துச் சொல்லியதாம்.

திருப்பெருந்துறை நிகழ்ச்சி நடைபெறுகின்றவரையில் கழிந்த காலம், சராசரி மனிதர்கள் சாதாரணப் பணிகளைச் செய்து பொழுதைப் போக்குகின்ற காலமாகும். அந்த நிலையில் அதனை வீணான காலம் என்று யாரும் சொல்வதில்லை. புதிய அனுபவம் கிடைத்த பொழுதுதான் இதனோடு ஒப்பிட்டுப் பார்த்து இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு முந்தைய காலத்தை வீணான காலம் என்ற முடிவிற்கு வருவதுண்டு. இக்கருத்தைப் பின்னரும்,

ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
பாழுக்கு இறைத்தேன் பரம்பரனைப் பணியாதே

(திருவாச: 327)