பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இப்பாடலுக்கு உரை காணுமுன் முன்னருள்ள 73வது பாடலுக்கு எழுதப்பட்ட குறிப்பைத் தயைகூர்ந்து நினைவில் கொள்ளவும். இல்லாவிட்டால் ‘பொய்க்கு விச்சுக்கேடு ஆகாது என்று கருதி எனை இங்கு வைத்தாய்’ என்ற அடிக்குப் பொருள் காண்பது கடினம். பொய் என்பதற்குப் பிறர் கூறும் முறையில் பிறவி முதலிய எந்தப் பொருளைக் கொண்டாலும், ‘யானே பொய் என் நெஞ்சும் பொய்' (திருவாச. 94) ‘பொய் கலந்தது அல்லது இல்லை பொய்ம்மையேன்' (திருவாச77) என அடிகளார் கூறும் இடங்களில் அப்பொருள் பொருந்தாது என்பதை அறிதல் வேண்டும்.

மேலே கூறியவை எல்லாம் ஒருபுறம் நிற்க, இப்பாடலின் முதலடியில் அடிகளார் கூறியதை ஆழ்ந்து சிந்தித்தால் ஏதோ ஒரு பொய் அவர் வாழ்வில், உள்ளத்தின் அடித்தளத்தில், போக்க முடியாத பெருந் துயரத்தை உண்டாக்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது. அதன் தாக்கம் அடிக்கடி அவர் மனத்தை உறுத்திற்று என்பதையும் அறிய முடிகிறது.

குருவானவர், மணிவாசகரைவிட்டு நீங்குவதற்கு முன்னர், 'கோலம் ஆர்தரு பொதுவினில் வருக' (திருவாச 2-128) என்று கூறிவிட்டுத்தானே சென்றார். அன்றியும் ‘அருளொடு பரா அமுது ஆக்கினன்' (திருவாச 3-18) என்று அடிகளாரே கூறியுள்ளாரே. அப்படியிருக்கக் குருவின் திருவடி தம்மை விட்டுநீங்கியதற்குத் தாமே காரணம் என்று அடிகளார் நினைக்கக் காரணமென்ன? அங்கேதான் மனத்தின் அடித்தளத்திலுள்ள பொய்யின் தாக்கம் வெளிப்படுகிறது.

பொய்யர் நெஞ்சில் நில்லான் ஈசன் என்பது முதுமொழி. ஒருவர் நெஞ்சில் ஈசன் நிற்கவில்லையானால் அவர் பொய்யுடையார் என்று தருக்க ரீதியாகச் சொல்ல முடியும். தாமே வந்து தண்ணளி செய்த குருவானவர்