பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 113


தாமே நீங்கிவிட்டார் என்றால், 'தாம்' பொய்யராக இருப்பதே காரணம் என்ற வருத்தம் அவர் மனத்தில் ஆழ்ந்து நிற்கின்றது. இந்த முன்னுரையோடு பாடலின் முதலிரண்டு அடிகட்குப் பொருள் காண வேண்டும்.

‘ஐயனே! (உன்) இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன் தாள் சேர்ந்தார். ஒரு வேளை உன் இச்சைக்கு ஆனவர்களில் எனக்கு இடமில்லை என்று கருதுவதானால் அதுவும் சரியாகப் படவில்லை’.

இச்சைக்கு ஆனவர்களில் இவருக்கு இடம் இல்லையென்றால் திருப்பெருந்துறை நிகழ்ச்சி எதற்காக? அந்த நிகழ்ச்சி ஒன்றே இச்சைக்கு ஆனவர்களில் அடிகளாரும் ஒருவர் என்பதை நிரூபிக்கும். அப்படியென்றால் தாள் சேர்ந்தாரோடு இவரையும் அழைத்துச் செல்லாமல் ஏன் விட்டுவிட்டுப் போனார்? இந்த வினாவை எழுப்பிக் கொண்ட அடிகளார், தம் ஆழ் மனத்தில் புதைந்துகிடந்த எண்ணத்தை விடையாகத் தருகின்றார்.

பொய் என்ற ஒன்று உலகத்தில் இல்லாமல் போய்விடுமே என்று கருதிய இறைவன் அந்தப் பொய் புதிதாக முளைப்பதற்கு விதையாகத் தம்மை இங்கு விட்டுச் சென்றார்’ என்று கூறுகிறார்.


86.

பேசப்பட்டேன் நின் அடியாளில்
    திருநீறே
பூசப்பட்டேன் பூதலரால் உன்
    அடியான்
என்று ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது
    அமையாதால்
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன்
    உன் அடியேனே 82

பூதலர்-பூமியிலுள்ள மக்கள். பேசப்பட்டேன்-புகழ்ந்து பேசப்பட்டேன்.