பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நெகிழவிடேன்-ஒழுக்கம் தளரேன். கண்டுகொள்-இயல்பைக் கண்டு அடிமையாகக் கொள்.

ஒருமனிதனுக்குப் புறப்பகுதி, அகப்பகுதி என்ற இரண்டு பகுதிகள் அமைந்துள்ளன. நம் கண்ணால் காணக்கூடிய உடம்பும் பல்வேறு உறுப்புக்களும் புறப்பகுதி எனப்படும். மனம், சித்தம், புத்தி முதலிய அந்தக்கரணங்கள் அகப்பகுதி எனப்படும். கை, கால் முதலிய புறப்பகுதிகளில் தோற்றுவிக்கப்படும் மாறுபாடுகள், அம்மனிதனுடைய மூளையின் கட்டளையால் நிகழ்வன ஆகும். ஆனால், மனம், ஆழ்மனம் என்பவற்றில் தோன்றும் உணர்ச்சிகள் அவனது கட்டளைக்குக் கீழ்ப்படிவதில்லை. இந்த அகப்பகுதிகள் புறப்பகுதியின்மேல் ஆட்சி செலுத்தக் கூடியவை. ஒருவன் உடலைக் குறுக்கிக்கொண்டு கையைத் தலைமேல் குவித்துக்கொண்டு வாயினால் இறைவன் திருநாமங்களை ஒப்பிக்கலாம். இத்தகையவருடைய மனம் எங்கேயோ சஞ்சரித்துக்கொண்டிருக்கலாம். மனம் வேறு, உடல் வேறாக இருக்கும் இந்நிலையைப் பொய்ந்நிலை என்று கூறவேண்டும்.

இதன் மறுதலையாக, மனத்தில் பக்தி நிரம்பிவழிந்து, அது சித்தத்திலும் சென்று தங்கிவிடும் நிலை ஏற்படுமேயானால் அதன் விளைவாக உடலில் தோன்றும் மாற்றங்கள் பல உண்டு. அத்தகைய ஒரு நிலையைத்தான் திருச்சதகத்தின் முதல் பாடல் குறிக்கின்றது. உடல் விதிர்விதிர்த்தல், கண்ணிர் ததும்பி வழிதல், உள்ளம் பொய்தவிர்தல் ஆகியவை ஆழ்மனத்தில் நிறைந்துள்ள பக்தியின் விளைவாகத் தோன்றும் அடையாளங்களாகும். இந்நிலையில், இறைவன் திருவடிகள் அந்த ஆழ்மனத்தில் பதிகின்றன. அந்தத் திருவடிகளுக்கு வணக்கஞ் செய்யும் முறையில், கைகள் தலைமேல் ஏறிக் குவிகின்றன; வாய் ‘போற்றி சயசய’ என்று பாடுகின்றது.