பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 123


மானிட உடம்பிற்கு இயற்கை ஒளி இல்லை. குருவாக வந்தவரின் மேனி ஒளியுடன் இருந்தது. அதனைக் கூறுவதாக இருப்பின் ஒளி உமிழ் மானிடம் அல்லது ஒளி திகழ் மானிடம் என்று கூறியிருக்க வேண்டும். அவ்வாறின்றி 'ஒளி செய் மானிடம்' என்று அடிகளார் கூறியிருத்தலின் குருவின் பரு உடல், தான் மட்டுமன்றிச் சுற்று வட்டாரத்தையும் ஒளி திகழச் செய்தது என்பது பெறப்படுகிறது. இவ்வாறு பொருள்கொள்வதற்கு ‘ஈறிலா நீ எளியை ஆகி, ஒளிசெய் மானிடம் ஆக வந்து' (என்னை) நோக்கியும் என்று கொண்டுகட்டுச் செய்க.

96.

மை இலங்கு நல் கண்ணி பங்கனே
       வந்து எனைப் பணிகொண்ட பின் மழக்
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால்
       அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்
மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய்
        மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்
பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு நீ
        போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே 92

மழக்கை-குழந்தையின் கை. அரியை-அருமையை யுடையை.

இப்பாடலில் மிக அற்புதமான உலகியல் உவமை ஒன்றைக் கூறுகிறார். 'மழக்கை’ என்றதால் மிக இளங் குழந்தை என்றபதாயிற்று. அத்தகைய குழந்தையின் கையில் பொற்கிண்ணத்தைத் தந்தால் அதன் பெருமையை ஒரு சிறிதும் அறியாது கீழே போட்டு விளையாடும். அது போலக் குருவடிவாக வந்த இறைவனின் பெருமையைத் தாம் அறிந்துகொள்ளாமல் எளிதாகக் கருதிவிட்டதாகக் கூறுகின்றார்.

இறுதி அடியில், தாம் பொய்யோடு பொருந்தியவராக இருப்பினும் தம்மை இவ்வுலகிடை விட்டுவிட்டுக் குருவானவர் மறைந்தது பொருத்தமாகுமோ என்று