பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கேட்கின்றார். இங்குப் 'பொய் இலங்கு’ என்ற பாடத்தைவிடப் ‘பொய்யில் இங்கு’ என்ற பாடமே சிறப்புடையதாக அமைகிறது.


97. பொருத்தம் இன்மையேன் பொய்ம்மை உண்மையேன்

போத என்று எனைப் புரிந்து நோக்கவும்
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன்
மாண்டிலேன் மலர்க் கமல பாதனே
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும்
நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை
இருத்தினாய் முறையோ என் எம்பிரான்
வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே 93


பொருத்தம்-தகுதி. போத-வருக. அரத்தம்-சிவப்பு. வம்பனேன்-வீனன். பொய்ம்மை யுண்மையேன்-பொய்மை நிரம்ப உடையவன்.

இப்பாடலிலும் உடனிருந்த அடியவர்களுடன் குரு மறைந்ததை நினைக்கின்றார். குரு புன்முறுவலோடு ‘சென்று வருக' என்று பொருள்படும்படி 'புரிந்து நோக்கவும்' அதை மறுத்து உன்னுடன் வருவேன் என்று சொல்லாமலும் சிறிதும் வருத்தப்படாமல் இருந்து விட்டதையும் நினைக்கிறார். உண்மையில் பொய்ம்மையே உண்மைப் பொருளாகக் கொண்டிருந்ததாகவும், வஞ்சகத்தையே மனத்திடைக் கொண்டிருந்ததாகவும், அதனால்தான் அடியவர்களுடன் செல்ல முடியவில்லை என்றும் வருந்துகிறார்.


இறுதி அடியில் தாம் அப்படி இருந்தாலும் தம்மை விட்டுச் செல்வது முறையோ என்று குருவை நினைந்து அரற்றுகின்றார்.

98. இல்லை நின் கழற்கு அன்பு அது என்கணே

ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே