பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 125


கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு

என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான்
ஏது கொண்டு நான் ஏது செய்யினும்
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுஇல் வானனே 94

கல்லை மென்கணியாக்கும் விச்சை-சுவையற்ற வலிய தொன்றைச் சுவையுள்ள மெலியதாக்கும் வித்தை. மறுவில் வானன்-குற்றமில்லாத ஞானாகாய வடிவினன்.

திருவாசகத்தில் பின்னரும் பல இடங்களில் கூறப்பெறும் ஒரு கருத்து இங்கு முதன்முதலில் இடம் பெறுகிறது. தம்முடைய மனம் கல் என்றும், அதனைக் குருவானவர் தம் பேராற்றலால் மென்மையான கனி போன்று மாற்றித் தம் திருவடிக்கண் ஈடுபடுமாறு செய்தார் என்றும் கூறுவதால் குருவின் பெருமையைக் கூறுனாராயிற்று.

தம் மனத்தைக் கனியாக மாற்றியமைக்குக் காரணம் குருவினுடைய எல்லையற்ற கருணையே என்று கூறிய அடிகளார், இப்பொழுது தாம் எதனைச் செய்தாலும் அதனைப் பொறுத்துக்கொண்டு மறுபடியும் திருவடியைத் தரவேண்டும் என்று இறைஞ்சுகிறார்.

99. வான நாடரும் அறி ஒணாத நீ

மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ
என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா
ஊனை நாடகம் ஆடுவித்தவா
உருகி நான் உனைப் பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடுவித்தவா
நைய வையகத்துடைய விச்சையே 95