பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



தேகப்பிரக்ஞை இல்லாதிருந்த அந்த நேரத்தைத்தான் “நின்தாள் புகுதப் பெற்று’ என்று பேசினார்.

இக்காட்சி முடிந்தவுடன் திருவடிகள் மறைந்தன. அதனுள் புகுந்து ஆனந்த லயத்தில் மூழ்கியிருந்த அடிகளாரின் ஆன்மா, மீட்டும் உடலுக்குள் புகுந்துவிட்டது. அதாவது, அடிகளாருக்குத் தேகப் பிரக்ஞை வந்து விட்டது. அப்பொழுது இந்த உடல் தம்முடைய முன்னேற்றத்திற்குத் தடை என்று அடிகளார் நினைக்கின்றார். இந்த உடல் இருந்ததனால்தானே ஆனந்த லயத்திலிருந்த அந்த ஆன்மா மீட்டும் வந்து இதனுள் புகமுடிந்தது. இதனை நினைந்தவுடன் இந்த ஆக்கையைப் போக்கப்பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றார். ஆனால், அவர் விருப்பப்படி ஆக்கை போவதாகத் தெரியவில்லை. அதனாலேயே 'மெலிகின்ற என்னை’ என்று பாடினார்.

115.

மாறுபட்டு அஞ்சு என்னை வஞ்சிப்ப
யான் உன் மணி மலர்த் தாள்
வேறுபட்டேனை விடுதி கண்டாய்
வினையேன் மனத்தே
ஊறும் மட்டே மன்னும் உத்தரகோச
மங்கைக்கு அரசே
நீறுபட்டே ஒளி காட்டும் பொன் மேனி
நெடுந்தகையே 11


அஞ்சு-பஞ்சேந்திரியங்கள். மட்டே-தேனே. நீறுபட்டு-திருநீற்றிற்பொருந்தி, வேறுபட்டேனை-பிரிந்த என்னை.

சென்ற பாடலில் ஆக்கையைப் போக்கப்பெற்று என்று பாடினார் அல்லவா? இந்த ஆக்கை இருந்ததால்தானே திருப்பெருந்துறைக்கு வரவும், குருதரிசனம் கிடைக்கவும், திருவடி தீட்சை பெறவும் வாயப்புக் கிடைத்தது!