பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


செல்லுமாறு செய்துவிட்டன. இந்த அஞ்சு வஞ்சகர்களின் வலையில் சிக்குண்ட என்னை விட்டுவிடாதே என்கிறார்.

116.

நெடுந்தகை நீ என்னை ஆட்கொள்ள
யான் ஜம்புலன்கள் கொண்டு
விடும் தகையேனை விடுதி கண்டாய்
விரவார் வெருவ
அடும்தகை வேல் வல்ல உத்தரகோச
மங்கைக்கு அரசே
கடும் தகையேன் உண்ணும் தெள் நீர்

அமுதப் பெரும் கடலே
12

விரவார்-பகைவர். அடுந்தகை-கொல்லுந்தன்மை. கடுந் தகையேன்-தீயகுணமுள்ள யான்.

'பெரியோனே! நீ என்னைத் தேடிவந்து இழுத்து அருள் செய்யவும் அதன் அருமைப்பாட்டை அறியாமல் அந்த இன்ப அனுபவத்தை விட்டுவிட்டேன். மழக் கை இலங்கு 'பொற் கிண்ணமாக நீ இருந்தாய், ஆனால், பொற் கிண்ணத்தின் அருமையறியாத மழக் கையாக (இளம் குழந்தையின் கையாக) நான் இருந்துவிட்டேன். என்னை விட்டுவிடாதே’ என்பதாம்.

பாடலின் நான்காவது அடி ஒரு சிறப்பை உள்ளடக்கியிருக்கின்றது. 'நீ தெண்ணிர் அமுதப் பெருங்கடலாக உள்ளாய் பெருங்கடலாக நீ இருத்தலின் திருப்பெருந்துறை, திருஉத்தரகோசமங்கை என்ற இரண்டு இறங்குதுறை மட்டும் அல்லாமல் வேறு எந்த இடத்தில் வேண்டு மானாலும் கடலுள் இறங்கி, தெண்ணீரைக் குடிக்கமுடியும். ஆனாலும், என்ன? நான் கடுந்தகையேனாக இருத்தலின் இறங்கிக் குடிக்கும் ஆற்றலை இழந்து நிற்கின்றேன். எனினும், என்னை விட்டுவிடாதே’ என்கின்றார்.