பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 159


பொறி புலன்கள் ஆன்மாவின் முயற்சிக்கு இடங் கொடாமல் எறும்புகளைப்போல் சுற்றி வந்து மொய்த்து இடர் விளைவிக்கின்றன என்பதாம்.

129. எறும்பிடை நாங்கூழ் எனப் புலனால்
அரிப்புண்டு அலந்த
வெறும் தமியேனை விடுதி கண்டாய்
வெய்ய கூற்று ஒடுங்க
உறும் கடிப் போது அவையே உணர்வு
உற்றவர் உம்பர் உம்பர்
பெறும் பதமே அடியார் பெயரா
பெருமையனே
25


நாங்கூழ்-சிறு பூழு அலந்த-வருந்திய கடிமணம். உம்பர் உம்பர்-தேவலோகத்தின் மேலுள்ள இடம். பெறும்பதமே-வீடுபேறு. அரிப்பு-அரிக்கப்பட்டு.

கிராமங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி பார்க்கின்ற ஒரு காட்சி இங்கே பேசப்பெறுகிறது. நாங்கூழ் என்பது புழுக்களுக்குப் பொதுப்பெயர். மண்புழுவிலிருந்து பச்சை, சிவப்பு நிறங்களோடு, பெருத்த வடிவுடன் காணப்பெறும் புழுக்களுக்கும் இப்பெயர் பொருந்தும். இப்புழுக்கள் தம் வழியே செல்லும்போது எறும்புகள் கூட்டமாக வந்து இப்புழுக்களைச் சுற்றிநின்று தாக்கும். எறும்பின் கடி பொறுக்கமாட்டாமல் புழு எப்படித் துடித்தாலும் புரண்டு வீழ்ந்தாலும் அங்கிருக்கும் எறும்புக் கூட்டத்தை விட்டு வெளியேற வாய்ப்பே இல்லை. அரிப்புண்டு எனக் கூறியதால் எறும்புகள் புழுவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தமக்கு இரையாக்கிக் கொள்கின்றன என்பது பெற்றாம்.

இங்கே ஆன்மா புழுவாகவும், பொறி புலன்கள் எறும்பாகவும் உவமிக்கப்பெற்றன.