பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



அடிகளாரைப் பொறுத்தவரை அமைச்சர் பதவியைத் துறந்து ஒற்றை ஆடையுடன் ஊர்கள்தோறும் திரிந்த காரணத்தால், அவர் காதுபடவே, பயித்தியம் என்று பொருள்படப் பல்வேறு சொற்களால் அவரை எள்ளி நகையாடினர்.

இந்த வசைச்சொற்கள் அடிகளாரின் காதுகளில் விழுந்து, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அளவிற்குப் பயன்பட்டன. ஆனால், தம்மை ஒருவர் வசைபாடும்போது அதனைக் கேட்டுச் சினங் கொள்வதும், எரிச்சல் படுவதும், வெறுப்புக் கொள்வதும் சாதாரண மக்கள் மனநிலை ஆகும். மக்கள் தம்மை பயித்தியம் என்று கூறியபொழுது, அச்சொல் அடிகளாரின் காதில் பட்டதே தவிர, மேலே கூறிய சினம் முதலிய எந்த எதிர்ச்செயலும் அவர் மனத்தில் எழவில்லை.

என்றாலும், அச்சொற்கள் காதில் விழுந்ததும், அவருடைய அறிவில் சென்று பட்டதும் உண்மைதான். அவ்வாறு காதில் விழுந்ததை, இன்ன சொற்கள் என்று புரிந்து கொள்ளும் மனநிலையைக்கூட அடிகளார் விரும்பவில்லை. இத்தனை இறை இன்ப அனுபவத்திலும், மனத்தின் அடித்தளத்தில் எங்கோ ஒரு மூலையில், 'நான்' என்ற ஒன்று செயலிழந்து கிடக்கிறது. பிறர் பயித்தியம் என்று கூறிய சொற்கள் இந்த 'நானை' மெள்ள உசுப்பிவிடுகின்றன. முடங்கிக் கிடந்த 'நான்', தன்னை யாரோ பயித்தியம் என்று சொல்கிறார்கள் என்ற நினைவில் ஒரு விநாடிக்கும் குறைந்த நேரத்தில் தலை தூக்க ஆரம்பிக்கிறது. இச்சொற்களின் தாக்கத்தால், அந்த 'நான்' முழுவதுமாக எழுந்து எதிர்ச்செயலில் ஈடுபடுவதற்கு முன்னர், இறையனுபவ ஆனந்தம் அந்த 'நானை' அமிழ்த்தி விடுகிறது. எனவே, பிறர் கூறும் பயித்தியம் என்ற சொல் அடிகளாரைப் பொறுத்தமட்டில் எந்தத் தாக்கத்தையும், விளைவையும் ஏற்படுத்திவிடவில்லை.