பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 169


பரம்பரனாக உள்ள நீ, ஒருவர் முயற்சியால் எட்ட அரிதானவன். ஆதலால், நீயே அருள்கூர்ந்து என் எதிரே வரவேண்டும்.

நீருக்கு ஒரே ஒரு சுவைதான் உண்டு. அன்றியும் குடிக்கின்ற நேரத்தில் தாகத்தைத் தணிப்பது தவிர அருமருந்து ஆவது இல்லை. ஆனால், உண்ணும்போதும் பெருஞ்சுவை தந்து பின்னர் அதுவே மருந்தாகி உடலுக்கு நலன் பயப்பது தேன். நீ எதிரே வந்தால் அந்த நேரத்தில் உண்டான ஆனந்தம் தவிரப் பிறவிப் பிணியைப் போக்கும் மருந்தாகவும் உள்ளாய் என்ற கருத்தில் தேன் என்றார்.

வாழைப் பழம்போன்று கனிவித்து என்று சொல்வதிலும் ஓர் அருமைப்பாடு உண்டு. வாழைப் பழங்கள் பலவகைப்படுமேனும், பொதுவாகப் பச்சை, மஞ்சள் என்ற இரண்டு நிறங்களை உடையன. நன்கு பழுத்த நிலையிலும் பழுக்காத நிலையிலும் தோல்பகுதி பச்சையாகவோ மஞ்சளாகவோ இருக்கும். நன்கு கனிந்த நிலையிலும் உள்ளே உள்ள சதைப்பகுதி மென்மைத் தன்மை பெற்றுச் சுவை கூடிவிடுமே தவிர, புறப்பகுதியின் நிறத்தில் மாறுபாடு தோன்றுவதில்லை.

இந்த உவமையைக் கூறியதால் திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முன்னும், திருப்பெருந்துறை நிகழ்ச்சியின் போதும், அது நிகழ்ந்து சிலகாலம் கழிந்த இப்பொழுதும் திருவாதவூரர் என்ற மனிதரின் உடலமைப்பில் எவ்வித மாறுபாடும் தோன்றவில்லை. ஆனால், பழம் கனிந்தது போலத் திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் அவர் மனம் கனிந்து விட்டது. பின்னர் அந்நிலைமை மாறியதால் இப்பொழுது அந்நிலை மீட்டும் வேண்டும் என்ற கருத்தை ‘வாழைப் பழத்தின் மனங்கனிவித்து’ என்று பாடுகிறார்.