பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 9


ஆனாலும், சொற்களின் பொருளைப் புரிந்துகொள்ளுமாறு செய்தது முடங்கிக் கிடந்த 'நான்' ஆகும். அது தொழிற்பட்ட நேரம் அரை விநாடிக்குக் குறைவாயினும், அதுகூட இருக்கக் கூடாது என்று விரும்புகிறார் அடிகளார். அதாவது அந்த நான் முழுவதுமாக இறந்து விட வேண்டும் என்பதையே 'எஞ்ஞான்றுகொல் சாவதுவே' என்று குறிப்பிடுகின்றார்.

இதே கருத்தை 'நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ' (திருவா:254) என்று அடிகளாரே பின்னரும் குறிப்பிடுகின்றார்.

பிற்காலத்தில் வாழ்ந்த அருணகிரியார்,

சும்மா இரு சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
(கந்தரனுபூதி -12)

என்றும்,

இறந்தேவிட்டது இவ்வுடம்பே -
(கந்தர் அலங்காரம் -19)

என்றும் பாடியுள்ளமை இங்கு நோக்கற்பாலது.


8. சாவ முன் நாள் தக்கன் வேள்வித்

தகர் தின்று நஞ்சம் அஞ்சி
ஆவ எந்தாய் என்று அவிதா
இடும் நம்மவர் அவரே
மூவர் என்றே எம்பிரானொடும்
எண்ணி விண் ஆண்டு மண்மேல்
தேவர் என்றே இறுமாந்து
என்ன பாவம் திரிதவரே! 4

அவிதா-முறையீட்டுச்சொல். திரிதவர்-திரிவர். தகர்-ஆட்டுக்கடா.