பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அணைந்துவிடும். அணைந்துவிட்டதாகவும், இனி அதனால் தீங்கொன்றும் இல்லை என்பதாகவும் நாம் அமைதி அடைந்துள்ள நிலையில், திடீரென்று அதே இடத்தில் மறுபடியும் பற்றிக்கொண்டு எரியும். ஓரிடத்தில் பற்றி அது பரவாமல் இருக்க, சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்து இடைவெளியை உண்டாக்குவார்கள். அகன்ற இடைவெளி இருத்தலின் தீ தொடர்ந்து எரிந்து அப்பகுதி வந்தவுடன் பற்றுவதற்கு வேறு மரமின்மையின் அணைந்துவிடும் என்று நினைப்பர். ஆனால், இங்கிருந்த ஒரு தீப்பொறி யார் கண்ணுக்கும் படாமல் காற்றின் உதவி கொண்டு, நெடுந்துரத்தில் சென்று வீழ்ந்து அந்தப் பகுதியும் பற்றி எரியுமாறு செய்யும்.

இந்த இயல்புகளையெல்லாம், சேட்டை செய்யும் பொறி புலன்களுக்கும் ஏற்றிக் காண முடியும். துன்பம் செய்யும் ஒரு பொறி அல்லது புலன் திடீரென்று செயலிழந்து நிற்கும். அது அடங்கிவிட்டது என்றும் அதனால் நமக்கினித் தொல்லையில்லை என்றும் நினைத்து அமைதி அடைகின்ற நேரத்தில், திடீரென்று மிக்க உக்கிரத்தோடு அப்பொறியோ, புலனோ பெரும் துன்பத்தை விளைக்கும்.

தொடர்புடைய பொருளைக் கண்டோ, கேட்டோ, தொட்டோ, முகர்ந்தோ, சுவைத்தோ அனுப்விக்கின்ற வேளையில்தான் இத்துன்பம் விளைகின்றது என்று நினைத்தால், அது தவறு. மிக நீண்ட தூரத்தில், அடைய முடியாத இடத்திலுள்ள ஒரு பொருளைப் பற்றிக்கொண்டு இப் பொறி, புலன்கள் துன்பம் தருவதும் உண்டு. இவற்றை எல்லாம் மனத்திற் கொண்டே அடிகளார் இந்த உவமையைப் பயன்படுத்தினார்.