பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


‘அடர்புலன்’ என்பது வினைத்தொகை. இவ்வாறு கூறுவதன் நோக்கம் பிறவிகள்தோறும் அடர்த்த (நெருக்கிய) இப்புலன்கள், இப்பிறவியிலும் அடர்கின்றன என்பதைக் குறிப்பதற்கே ஆகும். இதே நிலையில் மறுபிறவி எடுத்தாலும் அப்பொழுதும் என்னை அடர்க்கும் என்ற கருத்தில் அடர்புலன் என்று வினைத்தொகையாகக் கூறினார்.

இனி 'நிற்பிரிந்து' என்பது அடர் புலனுக்கும் அச்சத்திற்கும் இடையே நிற்கின்றது. குருநாதரைப் பிரியாது இருக்கும்போது அடர்புலன்கள் செயலிழந்தன. எனவே, உயிரோடு கூடிய அச்சம் என்பதும் அங்கு இல்லை. இனி இவை இரண்டும் அற்றம் பார்த்திருக்கும் கள்வர்போல் குருநாதர் திருவடியை விட்டு இவர் எப்பொழுது வரப்போகிறார் என்று புறத்தே காத்து நின்றன.

திருவடி சம்பந்தம் நீங்கியவுடன் இவை இரண்டும் தம்மைப் பற்றிக்கொண்டன என்று அழகாக எடுத்துக் கூறுகிறார் அடிகளார்.

புலன்கள் ஐந்தாயினும் அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து பணிபுரிகின்ற இடம் காமத்திலேயே ஆகும். எனவே, திருவடி சம்பந்தம் நீங்கியவுடன் இதுவரை காத்துநின்ற ஐம்புலன்களும் ஒன்றுகட்டி அடிகளார் உள்ளத்தில் பெண்ணிச்சையைத் தோற்றுவித்தன. ஏனைய உணர்ச்சிகளைக் காட்டிலும் பாலுணர்ச்சி வலிமையானதும், தவிர்க்க முடியாததும் ஆகும். ஆதலால், அதனை விளக்கமாகவே அடிகளார் கூறுகிறார்.

‘சார்ந்ததன் வண்ணம் உயிர்' என்பது இந்நாட்டுச் சமயவாதிகள் கொள்கையாகும். இதனால் உயிர் என்பது ஏதாவது ஒரு பொருளைச் சார்ந்து நிற்குமே தவிரத் தனித்து நிற்கும் இயல்புடைத்தன்று என்பது