பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 175


அருத்தாபத்தியால் பெற்றாம். தனு, கரண, புவன, போகங்களை உண்டாக்கிய இறைவன், இவற்றைப் பயன்படுத்திகொண்டு ஆன்மா முன்னேற்றம் அடையவேண்டும் என்ற கருத்தில் மனம், பொறி, புலன்களோடு கூடிய உடம்பை அதற்குத் தந்தான். மனம், பொறி, புலன்கள் என்பவற்றை அடக்கித் தன் வசப்படுத்தித் தன்னுடைய முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய உயிர், பெரும்பாலும் அவ்வாறு செய்வதில்லை. இது நடைபெற வேண்டுமானால் இறையருளின் துணை இருந்தாலொழிய இதனைச் செய்யமுடியாது. ஆதலின், தனித்து நிற்கும் தம்மைத் 'தமியேன்' என்றார்.

மனம், பொறி, புலன்கள் ஆகிய இத்தனையும் அந்த உயிரைச் சுற்றியிருப்பினும் உயிரின் முன்னேற்றத்திற்கு இவை உதவவில்லை; ஆதலால், இவை உடனிருந்தும் பயனில்லை என்ற கருத்தில் 'தமியேன்' என்றார்.

இறைவனைத் தனித்துணை என்று கூறியுள்ளது ஆழ்ந்த பொருளை உடையது. ‘தனி’ என்ற சொல்லுக்கு ஒப்பற்ற என்ற ஒரு பொருளும், வேறொரு துணையில்லாமல் ஒற்றையாக நிற்கும் என்ற ஒரு பொருளும் உண்டு. பொறி, புலன்களின் அலைப்புத் தாங்காமல் நிற்கும் ஒருவருக்குத் துணையாக வரும் ஒருவர், எவ்வித அலைப்புக்கும் உட்படாமல் தனியராக இருப்பது சாலச் சிறந்ததாகும். எனவேதான், 'தமியேன் தனித் துணையே’ என்றார்.

பொறி, புலன்கள் என்ற பெரும் பகைகளுக்கு அஞ்சி, தமியராக நிற்கும் ஒருவர் இரண்டை வேண்டி நிற்பர். முதலாவது தம் தனிமையைப் போக்கிக்கொள்ள ஒரு துணைவேண்டும் என்பதாகும். இரண்டாவது அத் துணையின் உதவி கொண்டு தம் பகையை வெல்ல விரும்புவதாகும்.