பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தனித்துணை செய்த உதவியையும் மறக்கலாயிற்று. எல்லாவற்றையும் மறந்து, தானே தலைவன் என்ற எண்ணம் ஆணவத்திற்கு வளர்ந்தது. அனைத்தையும் செய்யவல்லவன் தான் என்ற நினைவு வளர்ந்து உறுதிப்படலாயிற்று. ஆணவத்தின் இந்த வெளிப்பாட்டைத் ‘தலையால் நடத்தல்’ என்று இன்றும் உலக வழக்கில் கூறுவதுண்டு.

திருவாதவூரர் மணிவாசகராக மாறி இறைப் பிரேமையில் தம்மை மறந்து நிற்கும்பொழுதே இதற்குரிய காரணத்தை எளிதில் புரிந்துகொண்டார். குதிரை வாங்கச் சென்ற அமைச்சர், அதிகாரத்தின் உச்சிக் கொம்பிலிருந்த அமைச்சர், எல்லாவற்றையும் மறந்து திருவருள் பெற்றவுடன் தாம் தமியர் என்பதை உணர்ந்தார். இதுவரை அவருடன் இருந்த கல்வி, செல்வம், அதிகாரம், இவற்றால் ஏற்படும் ஆணவம் முதலியவை கரைந்து ஒழிந்தமையால், தாம் தமியர் என்பதை உணரமுடிந்தது. இது எவ்வாறு நடைபெற்றது என்பதை நினைக்கத் தொடங்கியவுடன் இவை அனைத்திற்கும் காரணம் தனித்துணை அவன் என்பதை உணர்ந்துகொண்டார் என்பதே. அந்த நிலையைத்தான் இதற்கு முந்திய பாடலின் இறுதி அடி விளக்கமாகக் கூறிற்று.

மனித மனத்தின் விந்தைதான் என்னே! வெகு விரைவில் எதனையும் மறந்துவிடும் ஆற்றல் அந்த மனத்திற்கு உண்டு. அதுவும், ஆணவம் அழிவதற்குக் காரணமாக உள்ளவற்றை மனம் வெகுவிரைவில் மறந்துவிடும். மனத்தின் இந்தத் திருவிளையாடலுக்கு ஆணவமும் உதவி புரிகிறது.

பழமை மறக்கப்பட்ட நிலையில் ஆணவம் தலைதூக்கி நடனம் புரிகின்றது. ஆன்மாவின் வளர்ச்சிக்கு உதவிய தனித்துணையை, பொறி, புலன்களை வெல்வதற்கு உதவிய தனித்துணையை இந்த ஆணவம் அழிவதற்கு உதவிய தனித்துணையை, மறந்துவிட்டது.