பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. திருவெம்பாவை

சங்க காலம் முதலே தைந்நீராடல் முதலிய பெயர்களில் இடம்பெற்றுவந்துள்ள ஒருவகைப் பாடலே பிற்காலத்தில் பாவைப் பாட்டாக மலர்ந்தது என்று கூறுவதில் தவறில்லை. திருப்பாவை, திருவெம்பாவை என்ற இரண்டிலும் கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் விடியற்காலை நேரத்தில் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு சென்று, குளத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது பேசப்பெறுகிறது. இப்பாடல்களில் வரும் பாவை என்பதற்குப் பலரும் பல விதமாகப் பொருள் கூறுவர். எது எவ்வாறாயினும் கன்னிப் பெண்கள் எதிர்காலத்தில் தங்கள் மனத்திற்கேற்ற கணவனை அடையவேண்டும் என்று விரும்புவது இயற்கை அன்றியும் நாடு முழுவதிலும் மழை பெய்து நாடு செழிக்க வேண்டும் என்று வேண்டுவதும் பொருத்தமானதே ஆகும்.

தங்களுக்கு நல்ல கணவன் வேண்டும் என்று விரும்புவது தன்னலமாகும். நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டுவது பொது நலன் பேணுவதாகும். அந்த இளமைப் பருவத்திலேயே தன்னலத்தோடு பொது நலத்தையும் பேணும் இயல்பு அவர்களுள் வளர்வது சிறப்புடையதாகும்.

மனத்திற்கேற்ற கணவன்மார் வேண்டுமென்று இறைவனை வழிபடும்போதுகூட 'எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' (திருவாச:173) என்று வேண்டுவது ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகும். இறைவன் மாட்டு அன்பு செய்பவர்கள் தம் கணவராக அமையவேண்டும் என்றால், அதன் பொருள் என்ன? இறைவன்மாட்டு முழு அன்பு செய்யும் அடியார்கள்