பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


தன்னலத்தை அறவே துறந்து எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண்பவர்களாகவும் எல்லா உயிர்கட்கும் அன்பு செய்பவர்களாகவும் இருத்தல் ஒருதலை. எனவே அத்தகையவர்களே தமக்குக் கணவராக அமையவேண்டும் என்று அவர்கள் விரும்புவதிலேயே அவர்கள் மனப்பாங்கை அறிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய கணவன்மார்கள் தங்களுக்கு வேண்டும் என்று கேட்பது தன்னலமாக இருக்கலாம். அத்தகையவர்களை அடைந்த பிறகு இப்பெண்களும் அனைத்து உயிர்களுக்கும் அன்பு செய்பவர்களாக மலர்வது உறுதியாகும்.

வையை ஆற்றில் தைந் நீராடும் பகுதி பரிபாடலில் பேசப்பெறுகிறது. அப்பகுதியில் சிற்றின்பக் கலப்பு இருப்பதை மறுத்தற்கு இல்லை. அப்படித் தொடங்கிய இந்நீராடற்பாடல் முழு வளர்ச்சி அடைந்து மணிவாசகர் காலத்தில் வேற்றுருவை அடைகின்றது.

'பைங்குவளைக் கார் மலரால்' (திருவாச:167) என்று தொடங்கும் பாடல், அதுவரை அவர்கள் அன்றாடம் நீராடும் குளம், இப்பொழுது, இறைவன்-இறைவி வடிவாகக் காட்சியளிக்கத் தொடங்கிவிட்டது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

அம்மானை, ஊசல் போன்று பாவைப் பாடலும் இளஞ்சிறுமியரின் விளையாட்டுப் பாடலாகத்தான் தோன்றியிருக்க வேண்டும். சிறுமியரைப் பொறுத்தமட்டில் அவர்கள் பருவமடைந்த பிறகு வெகுவிரைவில் அறிவு முதிர்ச்சி பெற்றுவிடுகின்றனர் என்பது நாமறிந்த உண்மை. இந்த வளர்ந்த வயதுடையவர்களையே பாவைப்பாட்டு குறிப்பிடுகின்றது என்று நினைப்பதில் தவறில்லை. அதனால்தான் தங்களுக்கு நல்ல கணவர் வேண்டுமென்று தொடங்குகின்ற அவர்களது வேண்டுகின்ற மனநிலை, இறுதியில் எங்கும் எவ்விடத்திலும் உமையொருபாகனைக் காணுகின்ற காட்சியாக மலர்வதைக் காண்கிறோம்.