பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவெம்பாவை * 201


அவனையே சரணமென்று கருதியிருப்பதாகவும் வெளிப்படையாக கூறிக்கொள்வர். ஆனால், தனியே இருக்கும்பொழுது, அல்லது சுகபோகங்களை அனுபவிக்கும்போது, இவர்கள் மனம் இறைநாட்டம் கொள்ளாமல் சுகபோகங்களில் மூழ்கி விடுதல் இன்றும் நாம் காணும் இயல்பாகும்.

தங்களுடைய இந்த மனநிலையை மறைக்க, எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் தங்கள் மனம் இறைவன்பால் உள்ளது என்றே கூறிக்கொண்டிருப்பர்.

இந்த ஒன்று, மூன்றாம் வகையினரின் மனோநிலை தான் இப்பாடலின் முதலிரண்டு அடிகளில் பேசப் பெறுகின்றது. உறங்குபவளை எழுப்பக் கூட்டமாக வந்து வீட்டின்வெளியே நின்று கொண்டு, உள்ளே இருப்பவள் இன்னும் உறங்குவதைக் கண்டு இவ்வாறு பேசுகின்றனர்.

'நேரிழையாய்' என்று விளித்ததால் இரவில் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றக்கூட மனம் இல்லாமல் அவற்றுடனேயே உறங்குகிறாள் என்பது பெறப் பட்டது. உறங்கும்பொழுதுகூடப் பொன் ஆபரணங்களை விட்டுவிட மனமில்லாதவள் எங்ஙனம் ஈசன்பால் பற்று வைக்கமுடியும் என்பது குறிப்பெச்சம்.

‘பெண்ணே பகல், இரவு எந்த நேரத்திலும் நாம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதெல்லாம் உன்னுடைய பற்று முழுவதும் பரஞ்சோதிக்கே என்று வாய் ஓயாமல் பேசும் நீயா, இப்பொழுது இந்தப் போதார் அமளியை விட்டு எழாமல் இருக்கின்றாய்'. 'போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ' என்று அவர்கள் கூறியதால் முன்னர்ப் பரஞ்சோதிக்கே தன் பாசம் என்று கூறியது எவ்வளவு பொருத்தமற்றது என்பது இப்பொழுது விளங்குகின்றது.