பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அன்றியும் தேவர்கள் தன்னலமே வடிவானவர்கள் ஆதலால், மலர்ப்பாதம் அவர்களுக்குக் காட்சி தரக் கூசுகின்றது.

157.

முத்து அன்ன வெள் நகையாய் முன் வந்து எதிர் எழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்து உன் கடை திறவாய்
பத்து உடையீர் ஈசன் பழ அடியிர் பாங்கு உடையீர்
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எம்க்கு ஏல் ஓர் எம்பாவாய் 3

அள்ளூறி-வாயூறி. கடைவாயில். பத்துடையீர்பற்று என்பது எதுகைநோக்கிப் பத்து என ஆயிற்று. பாங்கு-மேன்மை.

சென்ற பாடலைப் போலவே இப்பாடலிலும் எழுப்ப வந்து புறத்தே நிற்பவர்களுக்கும் உள்ளே படுத்துக் கிடப்பவளுக்கும் இடையே நடைபெறுகின்ற உரையாடல் பேசப்பெறுகின்றது.

புறத்தே நிற்பவர்கள் முன்னரே எழுந்து இறைவன் புகழைப் பாடிக்கொண்டு வீதியில் வந்தவர்கள்; ஆதலின், உள்ளே இருப்பவளைவிடத் தாங்கள் ஒருபடி முன்னேறியவர்கள் என்ற எண்ணம் உடையவர்கள் ஆகின்றனர். அதன் பயனாகவும், விளையாட்டாகவும் அவர்கள் ஏச்சில் ஓர் அழுத்தம் காணப்படுகிறது.

‘முத்துப்போன்ற பற்களை உடையவளே! நேற்று நீ என்ன பேசினாய் என்பது நினைவிலுள்ளதா? எங்களுக்கு முன்னே எழுந்து எதிரே நின்றுகொண்டு நாங்கள் வரும்போது இறைவனை அத்தன் ஆனந்தன் அமுதன் என்று சொல்லி உங்களை வரவேற்பேன் என்று கூறினாயே, அது மறந்துவிட்டதா? ஆனாலும் நேற்று நீ பேசும்போது,