பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 207


கூறிய உடனேயே அவர்கள் மனத்தில் ஓர் ஐயம் பிறந்தது. தாங்கள் எண்ணி விடை கூறுகின்றவரை, அந்த இடைநேரத்தில் ஒரு சிறு தூக்கம் போட்டுவிடுவாளோ என்று அஞ்சியவர்களாய்த் 'தோழி நாங்கள் இங்குள்ளவர்களை எண்ணி இத்தனை பேர் என்று சொல்வதற்குச் சிறிது காலதாமதம் ஆகும். அந்த இடைநேரத்தில் நீ சிறு தூக்கம் போட்டுக் காலத்தை வீணடித்துவிடுவாய். அதுமட்டும் அன்று, நாங்களும் விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப்பொருளை, கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உருகவேண்டிய நேரம் இது. இந்த நேரத்தை ஆள் எண்ணும் பணியில் செலவிடமாட்டோம். நீயே வந்து எண்ணிக்கொண்டு யாரேனும் வாராதிருப்பின் மறுபடியும் சென்று உறங்குவாயாக’ என்று முடித்தனர்.

‘எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்' என்று கூறியவர்கள், அச்சொற்களைக் கூறிய பிறகு எண்ணும் தொழிலைத் தொடங்கினால் அதனால் விளையப்போகும் இரண்டு பயன்களைச் சிந்திக்கலாயினர். ஒன்று, உறங்கியவள், எண்ணி முடிகின்றவரை மறுபடி உறங்கச் சென்றுவிடுவாள். இரண்டு, தங்களைப் பொறுத்தவரை விண்ணுக்கொருமருந்தை... எண்ணிக் கசிந்து உருக வேண்டிய நேரத்தை ஆள் எண்ணும் பணியில் செலவழிக்க விரும்பவில்லை. ஆதலால், 'எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம்’ என்று தொடங்கியவர்கள் ‘யாம் மாட்டோம் நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்’ என்று கூறிமுடித்தனர்.

சென்ற பாடலிலும் இப்பாடலிலும் புறத்தே நிற்பவர்கள் உள்ளே இருப்பவளை விளிக்கும்பொழுது 'வெண்ணகையாய்’ என்றும் 'நித்தில நகையாய்’ என்றும் கூறுவது உள்ளே இருப்பவளின் பண்பாட்டைக் குறிப்பதற்குரிய விளியாகும். எப்பொழுதும் பற்கள் தெரிய-