பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்ற சொல்லுக்கு, பொருள் கருதாது ஒலியளவில் பேசப்பெறும் சொற்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். சேக்கிழார் இங்ஙனம் கூறியதற்குத் 'தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்’ என்ற திருவாசக அடியே வழிகாட்டியது போலும்.

திருச்சின்னங்களிலிருந்து எழுகின்ற ஓசையும் ஒலியே ஆகும். தென்னா என்று கூறுபவர்களும் ஒலியளவில் கூறினார்களே அன்றிக் குறிப்பாக இறைவன் பெயரைக் கூறினார்கள் என்பதற்கில்லை. அப்படி இருந்தும் சின்னங்களின் ஒலியும் தென்னா என்ற சொல் ஒலியும் காதில் பட்டவுடன் உருகுதல் இப்பெண்ணின் இயல்பு என்பது தெரிவிக்கப்படுகிறது.

அத்தகைய ஒருத்தியின் வீட்டு வாயிலில் பலர் நின்று ஒலியளவில் இல்லாமல், இறையன்பின் வெளிப்பாடாகப் பொருள் பொதிந்த சொற்களான ‘என்னானை' என் அரையன் 'இன்னமுதன்’ என்பவற்றைத் தனித்தும், கூடியும் கூறியபோதும் அப்பெருமாட்டி எழவில்லை. ஆதலால், இதுவோ துயிலின் பரிசு என்று வியக்கின்றார்கள். 'இத்தகைய மனப்பான்மை உடைய உன்னை எங்கள் சொற்கள் எழுப்பவில்லை என்றால், உன்னை ஆட்கொண்ட துயிலின் பரிசை எங்களால் ஊகிக்க முடிகிறது’ என்பதாம்.

162.

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கு எங்கும்
கேழ் இல் பரஞ்சோதி கேழ் இல் பரங்கருணை
கேழ் இல் விழுப் பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈது என்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை - ஏழை பங்காளனையே பாடு
ஏல் ஓர் எம்பாவாய் 8