பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 221


எனவே, அடுத்துச் செய்யவேண்டியதை எண்ணித் துணிகின்றார்கள். சீரடியார்களாகவும் மகளிராகவும் உள்ள அவர்கள் வாழ்க்கை முன்னேறி, முழுப்பயன் தரவேண்டும் என்றால், அதற்கு இன்றியமையாத தேவை ஒன்றுண்டு. வாழ்க்கை முழுமை அடைய ஒரு கணவன் வேண்டும். அப்படிக் கணவனாக வருகின்றவன் இவர்களின் வாழ்க்கைக் குறிக்கோளை ஏற்றுக்கொண்டவனாகவும், அதற்குத் துணை நிற்பவனாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய ஒருவனைத் தங்கள் சிற்றறிவு கொண்டு தேடியடைதல் இயலாத காரியம். ஆதலால், இதுவரை தங்களுக்கு அருள்செய்து இந்த மனநிறைவோடு வளர்த்து விட்ட இறைவனிடமே இந்த வேண்டுகோளையும் வைக்கின்றனர்.

தங்களுக்கு இறைவன் தரப்போகின்ற கணவனிடம் என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை இதோ பேசுகிறார்கள். 'நின் அடியார் தாள் பணிவோம்’ என்றதால், வருகின்ற அவர்கள் எத்தகையவர்கள், அவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு உதவக்கூடியவர்களா என்ற ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கவில்லை. ஏன்? வரப் போகின்றவர்கள் அடியார்கள் ஆதலின் மேலெதுவும் பேசாமல் அவர்கள் தாள் பணிவோம் என்று கூறிவிட்டனர்.

'ஆங்கவர்க்கே பாங்காவோம்’ என்றதால், அடியார்களிடமே சரண்புகப்போவதால் தங்கள் தனித்துவத்தை விட்டுவிட்டு அவர்களோடு ஒன்றிவிடுவோம் என்கிறார்கள்.

இதனைக் கூறியவர்கள் அத்தகைய ஒருவரே தங்கள் கணவராக வரவேண்டுமென்றும் வேண்டுகின்றனர்.

அடுத்து உள்ளது 'அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்’ என்பதாகும். இந்த அடியில் 'உகந்து’ என்ற சொல்லை, உகந்து சொன்ன பரிசு