பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை 225 •


போவதும் உண்டு. இவற்றையெல்லாம் மனத்திற்கொண்ட தொல்காப்பியனார் 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன (தொல்:சொல்-5-1) என்று கூறிப்போனார்.

இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு பார்த்தால், பாதமலர் சொற்கழிவு என்று கூறுவதன் அடிப்படையை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். பாதம் என்ற சொல் திருவடி ஆகிய பருப்பொருளையும், 'பாதாளம் ஏழினும் கீழ் என்ற தொடர் நீட்டல் அளவையையும் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருத்தமாகத் தெரியவில்லை. அதேபோலப் ‘புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே' என்பதும் உயரத்தின் அளவையோ வடிவத்தையோ குறிப்பதாகக் கொள்வதும் சரியாகத் தோன்றவில்லை. பாதாளம் ஏழினும் கீழ் என்றதால் இவ்வாறு பொருள் கூறினர்போலும்.

மனத்தில் தோன்றும் எண்ணம், கற்பனை ஆகியவற்றிற்குச் சொல் ஒரளவு வடிவு கொடுக்கின்றது என்பது உண்மைதான். ஆனால், உணர்வின் அடிப்படையில் தோன்றும் எண்ணங்களுக்குச் சொல் வடிவு கொடுக்க இயலுவதில்லை. 'கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும், நாடனொடு நட்பு நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று, நீரினும் ஆர் அளவின்று (குறுந்தொகை:3) என வரும் சங்கப்பாடல் உணர்விற்கு அளவு கூற முடியாமையை நன்கு உணர்த்துகின்றது. கண்ணால் காணக்கூடியதை வைத்துக்கொண்டு காண முடியாத பருப்பொருளல்லாத நட்பின் பெருமையை இப்பாடல் குறிக்கின்றது.

சொல்லின் மூலம் எவ்வளவு அடுக்கிக் கூறினாலும் அது எல்லையுடையதாக ஆகிவிடுகின்றது என்பதை மறுத்தற்கில்லை. இந்தப் பிரச்சினையைப் போக்கிக் கொள்ள ஒரே வழிதான் உண்டு. அந்த அடிப்படையில் ‘சொற்கழிவு’ என்று கூறுவதன்மூலம் எல்லை கடந்து என்ற பொருளை அடிகளார் பெறவைக்கின்றார்.