பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


எங்கும் நிறைந்துள்ளதும் வடிவு கடந்ததுமாகிய பரம்பொருளுக்கு, மக்கள் மனத்தில் பதியவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வடிவு கற்பிக்கின்றார் அடிகளார். அதனாலேயே பாதமலர், புனைமுடி என்ற சொற்கள் மூலம் அவ்வடிவிற்கு ஒரு எல்லை காட்ட முயல்கிறார். எல்லையாக ஒன்றைக் கூறிவிட்டால் அனைத்தையும் கடந்து நிற்கும் அந்தப் பொருளின் இயல்பிற்கு இழுக்கு வந்துவிடும் என்ற நினைவு தோன்றவே, பாதமலர் சொற்கழிவு என்றும் புனைமுடி பொருள்முடிவே என்றும் கூறினாராயிற்று.

'பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்’ என்ற தொடரில் மிக நுண்மையான பொருள் அமைந்திருத்தலை அறிதல்வேண்டும். திருமேனி ஒன்றல்லன் என்றதால், உலகிலுள்ள எல்லாப் பொருளும் அவன் திருமேனி ஆகும். அதாவது, அவன் வடிவே ஆகும் என்பது கருத்து.

இவ்வாறு கூறியவுடன் ஒரு திருமேனி என்றால், அவன் ஒருவனுடைய வடிவையே அது குறிக்கும் என்று நினைந்துவிட வேண்டா. அந்த ஒரு திருமேனியிலும் ஒரு பகுதி சக்தியின் வடிவாகும் என்று கூறுகிறார்.

பொருள் (matter) , சக்தி (energy) என்ற இரண்டின் கூட்டாகவே அனு முதல் அண்டம்வரையுள்ள அனைத்தும் அமைந்திருக்கின்றது என்பதை இற்றைநாள் விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கின்றது. பொருளிலிருந்து சக்தியைத் தனியே பிரிப்பது ஏறத்தாழ இயலாத காரியம். இந்த அரிய கருத்தையே, திருமேனி ஒன்றல்லன் பேதை ஒருபால் உண்டு என்கிறார்.

அடுத்துள்ள அடி 'வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா'தவன் என்பதாகும். வேதம் யாராலும் இயற்றப்படாதது என்ற பொருளில் அபெளர்ஷேயம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.