பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 227


வேதத்தை அடுத்து, நுண் உடம்புடன்(சூக்கும சரீரத்துடன்) உள்ள விண்ணோரைக் கூறினார்; அதனை அடுத்துப் பருப்பொருளாக உள்ள மண்ணோரைக் கூறினார். இவ்வாறு கூறியதன் நோக்கம் ஒன்று உண்டு. மண்ணோர், காலம், இடம் (time and space) என்ற இரண்டிற்கும் கட்டுப்பட்டவர் ஆவர். தேவர்கள் காலத்திற்குக் கட்டுப்பட்டாலும் இடத்திற்குக் கட்டுப்படாதவர் ஆவர். வேதம், காலம் இடம் இரண்டையும் கடந்து நிற்பது. ஒன்றுக்கொன்று நுண்மைத்தாய மண் முதல் வேதம் வரையுள்ள அனைத்தையும் கடந்து நிற்கின்றான் என்ற கருத்தைத்தான் ‘ஓத உலவா' தவன் என்றார்.

இவ்வாறு கூறியவுடன் மிகத் தாழ்ந்தவர்களாகிய நமக்குக் காலம், இடம் என்பவற்றைக் கடந்து நிற்கும் அவன் பயன்பட மாட்டான் என்ற அச்ச உணர்ச்சி தோன்றுதல் இயல்பே ஆகும். இந்த அச்சம் காரணமாகவே அவனை வழுத்துவதைச் சாதாரண மக்கள் விட்டுவிடுவர். மனித மனத்திற்கு ஓர் இயல்பு உண்டு. தன் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றை அது சிந்திப்பது கடினம், அந்த ஒன்று தனக்கு உதவும், பயன்படும் என்ற நினைவு தோன்றினால் அந்தப் பொருளை மனித மனம் நாடிச்செல்லும், இக்குறைபாட்டினை நன்கு அறிந்த அடிகளார், நம் அச்சத்தைப் போக்க ஒன்றைச் சொல்கிறார். ஓத உலவாதவன் அவன் என்பது உண்மைதான்; ஆனால், அவனிடம் மற்றோர் இயல்பும் உண்டு. உயிர்கள்மாட்டுக் கொண்ட கருணையால் கரிக்குருவிக்கும் பன்றிக் குட்டிக்கும் அருள் சுரப்பவன் என்பதை நமக்கு நினைவூட்டுவார்போல 'ஒரு தோழன்’ என்றார். தோழனாக வரினும் என்றோ ஒரு முறை வந்து சில நேரம் உடனிருந்து பிறகு பிரிந்து சென்றுவிடுவானோ என்ற அச்சம் தோன்றாதிருக்கத் 'தொண்டர் உளன்’ (தொண்டர்களிடையே எப்போதும் உள்ளான்) என்றும்