பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


166. ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்து ஆடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீ ஆடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்பு அரவம் செய்ய அணி குழல்மேல் வண்டு ஆர்ப்பப்
பூத் திகழும் பொய்கை குடைந்து உடையான் பொன் பாதம்
ஏத்தி இரும் சுனை நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 12

ஆர்த்த-கட்டிய. ஆர்த்த ஆடும்-ஆரவாரித்து ஆகின்ற. தீர்த்தன்-தூய்மையானவன். குவலயம்-உலகம். கரந்தும்-மறைந்தும். விளையாடி-விளையாடுபவனே. வார்த்தையும்-புகழ்.

நாம் விரும்பினும் விரும்பாவிடினும் நம்மைப் பிடித்திருக்கின்ற இப்பிறவித் துயர் கெடவேண்டுமானால் அதற்கு ஒரே வழிதான் உண்டு. தில்லைச் சிற்றம்பலத்து, தீயைக் கையிலேந்தி ஆடும் இறைவனை, தீர்த்தம் எனக் கருதி அவனிடத்து மூழ்கி எழவேண்டும் என்க.

தீர்த்தன் என்ற வடசொல்லுக்குத் தூய்மை வடிவானவன் என்ற பொருள் இருத்தலின் மாசுடைய பிறப்பைக் கழுவ இறைவனாகிய தீர்த்தத்தில் ஆடுதல் ஒன்றே வழி என்கின்றார்.

தீயாடும் தீர்த்தன் என்றமையின் ஒன்றுக்கொன்று முரண்பட்டதும் ஒன்றையொன்று அழிக்கக்கூடியதுமாகிய நீரையும் தீயையும், அவற்றின் இயல்பை மாற்றித் தன்பால் கொண்டவன் என்ற கருத்தும் பெறப்படுகிறது.

அன்றியும் தீயாடும் தீர்த்தன் என்று கூறியது முரண்பாட்டினிடையே முழுமுதலைக் காணும் சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

சென்ற பாட்டில் கூறியது போலவே உடம்பு நீருள் நனையும்போது, நனைபவர்களின் மனமும் சொல்லும்