பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 237


இருந்தபடியேயும் காட்சியளித்தன. வழி அடியார்களுக்கு உரிய மனப்பக்குவம் வளரத் தொடங்கியவுடன் அதே குளம் இறைவன் இறைவியாகவும் காட்சி அளித்தது.

இவர்கள் இன்னும் ஓரளவு வளர்ந்திருப்பார்களேயானால், அவர்கள் பார்வையில் குளம் தென்பட்டிராது. அதற்குப் பதிலாக இறைவன் இறைவியாகவே காட்சியளித்திருக்கும்.

பொருள்களையெல்லாம் படைத்து அவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே மறைந்து நிற்பவனல்லவா அவன்? சாதாரணப் பார்வையில் பொருள்கள்மட்டும் கண்ணில் படுகின்றன. பக்தி மீதுர்ந்தவர் பார்வையில் பொருள்கள் மறைந்து உள்ளே உறையும் இறைவன் காட்சி நல்குகின்றான்.

பொருள், பொருளாகத் தெரிவது முதல்நிலை; பொருள் மறைந்து, இறைவன்மட்டுமே தெரிவது இறுதிநிலை. பொருளும் உள்உறையும் இறைவனும் தெரிவது இடைப்பட்ட நிலை.

‘பார்க்கின்ற மலர் ஊடு நீயே இருத்தி’ என்று தாயுமானவ அடிகள் பேசுவது இந்த இடைப்பட்ட மனநிலையைக் குறிப்பதாகும். அவர்க்கு மலரும் தெரிகிறது; அதனுள் இருக்கும் இறைவனும் தெரிகின்றான். அதனாலேயே ‘மலரூடு’ என்று பாடினார்.

இப்பெண்களைப் பொறுத்தமட்டில் ஓரளவு வளர்ச்சியடைந்து இந்த நிலையை எய்திவிட்டனர் ஆதலால், குளம் 'எங்கள் பிராட்டியும் எங்கோனு'மாகக் காட்சி அளிக்கிறது.

செங்கமல மலர் இறைவனது திருமேனியைக் காட்டி நிற்கின்றது, பைங்குவளை மலர் நீலமேனி வாலிழையைக் காட்டி நிற்கின்றது; 'குருகினம்’ என்ற சொல் பறவைக்