பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238 • திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கூட்டங்களையும், அன்னை கையில் அணிந்துள்ள வளையல்களையும் காட்டி நிற்கின்றது; ‘அரவம்’ குளத்திலுள்ள பாம்புகளையும், மகளிர் தம்முள் எழுப்பும் பேச்சு ஒலியையும், இறைவன்மேலுள்ள பாம்புகளையும் காட்டி நிற்கின்றது.

மனிதர்களுக்கு உடம்புபற்றிய புற அழுக்கும், உயிர் பற்றிய அக அழுக்கும் இயல்பாகவே அமைந்துள்ளன. புற அழுக்கைப் போக்கக் குளம் உதவுகிறது; அக அழுக்கைப் போக்கிக்கொள்ள இறைவன் உதவுகிறான்.

‘எம்கோனும் போன்று இசைந்த பொங்கு மடு' என்ற தொடரில் போன்று என்ற உவமை உருபு வருவதால் குளத்தை இறைவனுக்கு உவமையாகக் காட்டி, அவ்வாறே பலரும் பொருள் கூறியுள்ளனர்.

இவர்கள் மன வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு பார்த்தால், ஒரே நேரத்தில் குளம் குளமாகவும், இறைவன் இறைவியாகவும் காணப்படுதலை அறிய முடியும். இவ்வாறு பொருள் செய்யும்போது 'எம்கோனும் போன்றிசைந்த மடு’ என்பதற்கு எம்கோனோடு பொருந்தி இசைந்துள்ள மடு என்று பொருள்கொள்வது சரியாக இருக்கும்.

168. காது ஆர் குழை ஆடப் பைம் பூண் கலன் ஆடக்
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல் ஆடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப் பொருள் ஆமா பாடிச்
சோதி திறம் பாடிச் சூழ் கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடு ஏல் ஓர் எம்பாவாய்
14

குழை-காதணி. கலன்-அணி. கோதை-மாலை. அப்பொருள் ஆமாபாடி-இறைவன் அகரப் பொருளாய் இருப்பதைப் பாடி;