பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 239


அந்தம் ஆமாபாடி-இறுதியாயிருப்பதையும் பாடி. பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை-இரும்பைப் பொன்னாக்கினாற் போலச் சிவஞானத்தின்னமுதம் ஊட்டி,

இப்பாடலின் தனிச்சிறப்பு மனம், மொழி, மெய் என்ற மூன்றிற்கும் ஒருங்கிணைந்த பணியைத் தருதலேயாகும். நீருள் குதித்து முங்கிமுங்கி எழும்பொழுது குழை முதலியன மேலும் கீழுமாக ஆடுதல் இயல்பு. உடலிலுள்ள பல்வேறு உறுப்புக்களோடு தொடர்புடைய அணிகலன்கள் ஆடஆட என்பதால், இவை மேலும் கீழுமாக அசைந்து ஒருவகை ஒலியை எழுப்புகின்றன. ('காதார் குழையாட' என்பது முதல் 'கோதை குழலாட' என்பதுவரை உள்ள பகுதி மேலே குறிப்பிட்டுள்ள ஆடலைக் குறிப்பதாகும்).

இந்த அணிகலன்களின் அசையும் தாளகதிக்கு ஏற்ப வாய் பாடத் தொடங்குகிறது. மேலேயுள்ள நான்கில் குழை, கலன், குழல் என்பவை உயிரற்ற பொருள்களாகும். தாமே ஆடும் ஆற்றல் அவற்றிற்கு இல்லை. அவை சேர்ந்த உறுப்புக்கள் ஆடுதலால் இவற்றை ஆட என்றார். நான்காவதாகவுள்ள வண்டு, பாடும் இயல்புடையது. ஆனால் இவர்கள் குழல்மேலுள்ள பூவில் பாட்டை மறந்து அமர்ந்திருந்தன. அந்தக் கூந்தல் நீரில் மூழ்கும்போது எழுந்தும் எழும்போது அமர்ந்தும் வண்டுகள் ஆடுகின்றன. இந்த மலர்களில் அமர்ந்துவிட்ட காரணத்தால் வண்டுகள் பாட்டை மறந்தன.

அதேபோல மக்களாகிய நாமும் உலக இன்பங்களில் தோய்ந்துவிட்டமையின் இறைவன் புகழைப் பாட மறந்துவிட்டோம். கூந்தலிலுள்ள வண்டுகள் அமைதியாக இருக்க முடியவில்லையே! அந்தக் கூந்தல் நீருள் மூழ்கும்போது எழுந்தும் அக்கூந்தல் வெளிவரும்போது அதன்மேல் அமர்ந்தும் நிலையற்ற இன்பத்தை அனுபவிப்பதைப் போலத்தானே நாமும் நிலையற்ற உலக இன்பத்தை அனுபவிக்கின்றோம்.