பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 241


கவும் அதாவது சப்த, அர்த்தப் பிரபஞ்சங்களாகவும் உள்ளான் என்பதைக் குறித்து நிற்கின்றது.

அடுத்து உள்ளது 'அப்பொருள் ஆமா பாடி’ என்பதாகும். வேதப் பொருள் என்ற தொடருக்குப் பின்னர் அப்பொருள் என்று வருவது சிந்திக்கத்தக்கது. வேதம் என்பது பல்வேறுபட்ட பல்வேறு வகையான ஒலிக் கூட்டங்களின் தொகுதியாகும். அதுபோல அச்சொற்கள் குறிக்கும் பொருள்களும் பல்வேறுபட்டனவாகும். இவ்வேறுபாடுகளின் இடையே ஒருமைப்பாட்டைக் காண்பதே 'அப்பொருள்’ என்ற சொல்லின் பொருளாகும்.

பல்வேறு ஒலிகளும், பல்வேறு பொருள்களும் வேதத்தில் குறிப்பிடப்படினும், அவை அனைத்தும் அவன் ஒருவனே என்பதை அறிவிக்கவே 'அப்பொருள் ஆமா பாடி' என்றார்.

காளிதாசன் ரகுவம்சத்தின் முதல் பாடலில் இக்கருத்தை மிக அழகாக 'வாக்காகவும்(சொல்லாகவும்) அர்த்தமாகவும் (பொருளாகவும்) விளங்குகின்ற உமா காந்தனை வணங்குகிறேன்’ என்று கூறியுள்ளது அறியத்தக்கதாகும்.

அடுத்து நிற்பது 'சோதி திறம்பாடி' என்பதாகும். சோதியின் திறம் என்று கூறியமையின் புறத்தே காணப்படும் புற ஒளியை அல்லாமல் அகத்தின் ஆழத்தே தோன்றும் அக ஒளியையே குறிப்பிடுகின்றார் என்பதை அறிதல் வேண்டும்.

‘ஆதித்த ஹ்ருதயம்' போன்ற நூல்கள் புற உலகின் இருளைப் போக்கும் சூரியனைச் சோதி என்று புகழ்ந்து பாடின. ஆனால், அடிகளார் ஆதித்தன் இறைவனால் படைக்கப்பட்டவன்; அவனுடைய ஒளியும் இறைவனிட்ட பிச்சையே ஆகும் என்பதைக் குறிக்க 'அருக்கனில் சோதி அமைத்தோன்’ (திருவாச:3-20) என்று பாடியுள்ளார்.