பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 17


திருவாதவூரரே ஆவார். அப்படியிருக்க 'நாடகத்தால் உன்அடியார்போல் நடித்து நான் வீடகத்தே புகுந்திடுவான் விரைகின்றேன்' என்று கூறியது ஓர் அடியாரின் புறவேடத்தைக் குறிப்பதன்று என்பதை விளங்கிக்கொள்ள முடியும். எனவே, அடியார்போல் நடித்தல் புறவேடத்தைக் குறிக்கவில்லை என்றால் பின்னர் எதனைக் குறித்தது? உண்மை அடியாரின் தலையாய இலக்கணம் அசைக்க முடியாத இறை அன்பாகும். குருநாதரின் தீட்சையும், அடியார்களின் சேர்க்கையும் மெய்யன்பு உடையவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவை கிடைத்துவிட்டதால் தாம் கொண்டிருந்த அன்பு உண்மையானது; அந்த அன்பின் பயனாகத்தான் இவ்வடியார் கூட்டத்தினிடையே இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது என்று கருதியிருந்த அடிகளாருக்கு, அவர்கள் அனைவரும் மறைந்தவுடன் தாம் கொண்டிருந்த அன்பின்மேல் சந்தேகம் வந்துவிட்டது. தம் அன்பு பொய்யானது; ஆதலால்தான் அவர்கள் மறைந்தனர் என்று நொந்த அடிகளார் 'இடையறா அன்பு ஊடகத்தில் நிறைந்து நின்று உருகும் வாய்ப்பைத் தருவாயாக’ என வேண்டிக் கொள்கிறார்.


16.

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்
இறப்பு அதனுக்கு என் கடவேன்
வானேயும் பெறில் வேண்டேன்
மண் ஆள்வான் மதித்தும் இரேன்
தேன் ஏயும் மலர்க் கொன்றைச்
சிவனே எம்பெருமான் எம்
மானே உன் அருள் பெறும் நாள்
என்று என்றே வருந்துவனே
12

ஏதும்-சிறிதும். என்கடவேன்-என்ன செய்யவல்லேன். தேனேயும்-தேன் பிலிற்றும்

இப்பாடலில் வரும் பிறப்பஞ்சேன், இறப்பதனுக்கு என்கடவேன் என்ற தொடர்களுக்குப் பிறப்பு, இறப்பு