பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 253


இத்தகைய ஒரு காட்சியை மனத்துட்கொண்டு விடியற்கால நேரத்தில் ஒளி உமிழ்ந்துகொண்டிருக்கின்ற தாரகைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். மிக அற்புதமாக இந்த விண்மீன்கள் ஒளியை உமிழ்ந்துகொண்டு இருக்கின்றன. பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக விண்மீன்களின் ஒளியாட்டம் மங்கத் தொடங்கிவிடுகின்றது. உலகைச் சூழ்ந்துள்ள இருள், இத்தாரகைகள் ஒளி உமிழ்ந்து மின்னப் பின்புலமாக அமைந்துள்ளது. எங்கோ ஒரு மூலையில் கதிரவன் தோன்றுகிறான். அவன் வருவதற்கு முன்னர், அவனுடைய ஒளிக் கதிர்கள் முதலில் இப்பின்புலத்தை அழிக்கின்றன. இந்தப் பின்புலம் அழிய அழிய மின்னிக்கொண்டிருந்த தாரகைகள் தம் ஒளியை இழக்கின்றன. அதாவது, பொழுது விடிய விடியத் தாரகைகளின் ஒளியாட்டம் இருந்த இடம் தெரியாமல் மங்கிவிடுகின்றது. பொழுது விடிகின்ற சிறப்பை மிக அற்புதமான உவமையின் மூலம் விளக்குகின்ற அடிகளார், அந்த உவமையிலேயே ஓர் அருங்கருத்தையும் பொதித்துள்ளமை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்.

அடியார்கள் வேண்டும் இடத்து, வேண்டும் வடிவில் அவர்கள் கண்களுக்கு விருந்தாய் நிற்கின்றான் இறைவன். கண்ணுக்கு அமுதாய் நின்றான் என்றதால் அவரவர்கள் கண்ணுக்கு அவரவர் விரும்பும் வடிவைக் கொண்டு காட்சி அளிக்கின்றான் என்றவாறு.

வேண்டுவார் மன நிலைக்கு ஏற்ப வேண்டுருக் கொண்டான் ஆயினும், அவன் ஒருவனே என்பது திண்ணம். அந்த ஒருவன் யார்?

உலகத்திலுள்ள நிலையியல், இயங்கியல் உயிர்கள் அனைத்தும் பெண்ணுருக் கொண்டும் ஆண் உருக்-