பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கொண்டும், அலி உருக் கொண்டும் விளங்குகின்றன. எத்தனை வகைப் பெண்ணுரு எத்தனை வகை ஆணுரு ! என்ற வியப்புத் தோன்றுகிறது அல்லவா? இந்த உயிர்கள் மேற்கொண்ட வடிவுதான் வெவ்வேறே தவிர மூலத்தில் வேறுபாடு இல்லை. எனவேதான், 'பெண்ணாகி, ஆணாய், அலியாய் நின்றான்' இவன் ஒருவனே என்கிறார்.

இந்த ஐயம் தீர்ந்த பிறகு, பெண் ஆண் பேதம் இல்லாமல் காணப்படும் இயற்கையின் வடிவுகள் ‘விண்ணாகி மண்ணாகி' இருக்கும் நிலை விளங்கத் தொடங்குகிறது.

பெண், ஆண் என்று வேறுபட்டு நின்றும் விண், மண் என்று வேறுபட்டு நின்றும், காட்சி தருகின்ற நிலையைக் கண்டு, இவை பல அல்லது, அவன் ஒருவனே வேறுபட்ட இந்த வடிவுகளாகக் காட்சி தருகின்றான் என்பதைக் குறிக்கவே 'பிறங்கு ஒலிசேர் விண்ணாகி மண்ணாகி நின்றான் ஒருவன்’ என்று கூறினார்.

'பிறங்கு ஒளி சேர்' என்றே பலரும் பாடங் கொண்டுள்ளனர். விண்ணுக்கு இலக்கணம் ஒலியே தவிர ஒளியன்று. 'பிறங்கு ஒலி சேர்’ என்றே பாடங்கொள்ள வேண்டும். பிறங்கு என்ற சொல்லுக்கு விரிதல் என்பது பொருளாகும். 'உண்டைப் பிறக்கம்' (திருவாச. 3.) முன்னரும் அடிகளார் கூறியது நோக்கத்தக்கது. இங்கு பிறங்கு ஒலி என்றது, ஆகாயத்தில் எப்பொழுது எங்கும் நிறைந்து நிற்கும் ஆதி நாதத்தையே (Premordial Sound) ஆகும்.

மேலே கண்ட பொருள்களுள் கட்புலனுக்கும் தெரியும்படி அமைந்துள்ளவை பெண், ஆண், அலி, மண் என்பவையாம். கருத்துக்கு மட்டும் புலப்பட நிற்பது விண்ணாகும். கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்பட நின்ற