பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 255


இவை அனைத்தையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் அனைத்தும் ஒருவனே என்ற கருத்தைத் தெளிவாக்கி விட்டார்.

இத்தோடு நிறுத்தியிருப்பின் ஒரு பெருங்குறை நேர்ந்துவிடும். இவையனைத்தும் எல்லையுடைய பொருள்களாகும். இவைமட்டும் அவன் வடிவுகள் என்றால் அவனும் எல்லைக்கு உட்பட்டவன் என்று நினைக்கும் தவறு நேர்ந்துவிடும் அல்லவா?

கடவுள் என்ற சொல்லின் ‘கட’ என்ற முற்பகுதி அனைத்தையும் கடந்து நிற்பவன் என்றல்லவா கூறுகிறது. மேலே அடிகளார் கூறியவை கடவுள் என்ற சொல்லின் ‘உள்’ என்ற பிற்பகுதியின் பொருளாகும்.

இக்குறைபாட்டை நீக்கவும் ‘கட’ என்ற சொல்லின் பொருளும் விளங்கவும் இத்தனையும் வேறாகி என்றார். அதாவது, இவைகளாகவும் இவற்றின் வேறாகவும் இருப்பவன் 'கண்ணார் அமுதமாய் நின்றான்' ஒருவன் என்றார்.

இதே கருத்தை காழிப் பிள்ளையார்,

ஈறாய் முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறா மறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறு ஆர்சுவை ஏழு ஒசையொடு எட்டுத் திசை தானாய்
வேறாய் உடன் ஆனான் இடம் விழிம் மிழலையே

(திருமுறை: 1-11-2)

என்ற தேவாரத்தில் 'வேறாய் உடன்' ஆனான் என்று கூறுவதிலிருந்தும் காணமுடிகிறது.