பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 257


அவர்களுடைய மனத்தில் ஓர் அச்சம் தோன்றியது. என்றாலும், இறைவனே ஆயினும் அவனிடம் தங்கள் முடிவான கருத்தை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் உள்ளிருந்து உந்தியதால் ‘பழஞ்சொல்லை மீட்டும் சொல்வதில் ஏற்பட்ட அச்சம் காரணமாக, அதை விட்டுவிட்டு வேறு ஒன்றைக் கூறுகிறோம் கேட்பாயாக எம் தலைவனே!’ என்று அவர்கள் பேசத் தொடங்கினர்.

முன்னர் 163-ஆம் பாட்டில் 'அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்’ என்று கூறியவர்கள் அதே கருத்தை எதிர்மறைமுகமாக இப்பொழுது இங்கே கூறத் தொடங்குகின்றனர்.

இவ்வாறு கூறக் காரணம் என்ன? ஒன்றை வேண்டும் என்று கூறிவிட்ட பின்னர், அவர்கள் வினை வேறுவிதமாக இருப்பின் அவ்வினைக்கு ஏற்ப, வேண்டும் என்று விரும்பியதைத் இறைவன் தாராது இருந்துவிடுவான் அல்லனோ? இம்மகளிர் இவ்வாறு அச்சம் கொள்வது நியாயமானது என்பதைக் காரைக்கால் அம்மையார் வரலாற்றில் காண்கிறோம் அல்லவா? 'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’ (அற்புதத் திருஅந்தாதி:1) என்று பாடிய அம்மையாருக்கு எத்தகைய கணவன் கிடைத்தான்? இரண்டாவது மாம்பழம் கிடைத்தது ஈசன் அருள் என்று அம்மையார் கூறியவுடன், அவன் குழம்புகிறான். அவனுடைய வரவு செலவுக் கணக்கில் 'ஈசன் அருள்’ என்ற பொருளை அவன் கண்டதேயில்லை. அதனால், அம்மையார் வார்த்தை அவனுக்குப் பிடிபடவேயில்லை. இதனைக் கூறவந்த சேக்கிழார் 'ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்' (பெ.பு:காரை.புரா:29) என்று கூறுகிறார். இத்திருமணம் பொருந்தாத் திருமணம்