பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


174. போற்றி அருளுக நின் ஆதி ஆம் பாத மலர்
போற்றி அருளுக நின் அந்தம் ஆம் செம் தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றம் ஆம் பொன் பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகம் ஆம் பூம் கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறு ஆம் இணை அடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன் மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீர் ஆடு ஏல் ஓர் எம்பாவாய் 20

போற்றி-போற்றப்படுபவனே. செந்தளிர்கள்-தளிர் போன்ற திருவடிகள். போகம்-பாதுகாப்பு. புண்டரிகம்-தாமரை.

தைந் நீராடல் என்ற சங்ககால வழக்கு அடிகளார் காலத்தில் மாறி, மார்கழி நீராடல் எனப் பயின்று வந்தமையை, இப்பாடலின் இறுதி அடி விளக்குகின்றது.

'போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்’ என்பதை முதலில் வைத்து, 'போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்’ என்பதை இறுதியிலுள்ள 'மார்கழி நீர் ஆடேல் ஓர் எம்பாவாய்’ என்பதற்கு முன்னர் வைத்துக்கொண்டால் அடிகளார் கூறவந்த கருத்தை நன்கு விளங்கிக் கொள்ள முடியும். பாடல் முழுவதும் திருவடிப் பெருமையைத்தான் பேசுகின்றது. அந்தத் திருவடியே 'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய் உள்ளது' என்பதை ‘ஆதியாம் பாத மலர்’ என்ற சொற்களால் கூறினார்.

அடுத்து, அந்தத் திருவடி விளையாட்டாக நிகழ்த்தும் ஐந்தொழிலையும் வரிசைப்படுத்திப் பேசுகின்றார். 'எல்லா உயிர்க்கும் தோற்றமாம்' என்றதால் நிலையியல் பொருள், இயங்கியல் பொருள் ஆகிய அனைத்தும் தோன்றுதற்கு