பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 263


சிறப்பாகத் திருவடியைப் போற்றிய பெருமை சைவர்களுக்கே உரியதாகும்.

அடுத்தபடியாக வைணவர்களும் சில இடங்களில் திருவடிப் பெருமை பேசியுள்ளனர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியின் முதல் பாடலின் நான்காவது அடியில் 'துயர் அறு சுடர் அடி தொழுது எழல் என் மனனே’ (நாலாயிர திருவாய்மொழி -1) எனப் பாடியுள்ளமை இங்கு நோக்கத் தக்கது.

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல், பொதுமறை கூறிய வள்ளுவப் பேராசானும் திருக்குறளின் முதல் அதிகாரத்தின் ஏழு இடங்களில் இறைவன் திருவடியைப் பற்றியே பேசுகின்றார்.

புத்தம், சைனம் முதலிய எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாயினும், அவர்கள் தமிழர்களாக இருப்பின் திருவடிப் பெருமை பேசாமல் இரார்.