பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இப்பாடல்களைப் பாடி ஆடினர். நாளாவட்டத்தில் அவர்களையும் அறியாமல் பாடகளின் உட்பொருள் அவர்கள் உள்ளத்தில் சென்று தங்கிற்று. ஒரு சமுதாயத்தின் சரிபாதியான மகளிரை இளவயதிலேயே இறையுணர்வு பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்று நினைத்த அடிகளார், இப்பாடல்கள் மூலம் பெருவெற்றி அடைந்தார் என்று கூறினால், அது மிகையாகாது.

இப்பாடல்கள் ‘ஆறடித் தரவு கொச்சகம்’ என்ற பெயரில் அமைந்துள்ளன. ஒவ்வோர் அடியும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருத்தலைக் காணலாம்.

இப்பகுதிக்குப் பழங்காலத்தில் ‘ஆனந்தக் களிப்பு’ என்று யாரோ பெயரிட்டுள்ளனர். பின்வந்தவர்கள் அத்தலைப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கு விளக்கமும் எழுதினர். ஆனந்தம் என்பது அகத்தே தோன்றுவது. களிப்பு அல்லது மகிழ்ச்சி என்பது புறமனத்தே தோன்றுவதாகும். இந்த ஆனந்தம் அகத்தே நிறைந்திருக்கும்போது அதனை உடைய மகான்கள் அதனை வெளிக்காட்டுவதே இல்லை. அவர்கள் முகத்தில் காணப்பெறும் அமைதி, கண்டார் அனைவரையும் ஈர்க்க வல்லதாகும். அகமனத்தில் நிறைந்த ஆனந்தம் அற்புதமான அலைகளை ஓயாது வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். ஆதலின், எதிரே உள்ளவர்களையும் ஈர்க்கும் ஆற்றல் உடையது அது. இத்தகைய ஆனந்தம் என்ற சொல்லோடு களிப்பு என்ற மிகச் மிகச் சாதாரணமான சொல்லையும் சேர்த்து ஆனந்தக் களிப்பு என்று பெயரிட்டவர்கள், ஆழ்ந்து சிந்தித்து இப்பெயரைத் தந்ததாகத் தெரியவில்லை.

அடிகளாரின் பின்வரும் பாடல்களில் ஆனந்தமும் அது தோன்றுவதற்குரிய காரணமும் பேசப்பெற்றுள்ளன. அது ஏன் என்பதைப் பின்னர்க் காணலாம்.