பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தரு அமமானை * 269


ஆயிற்றே! பிறப்பை அறுக்கவேண்டுமானால் அந்த உயர்ந்த மனநிலைக்கு வளர்ந்தவர்களை மட்டும்தானே ஏற்றுக் கொண்டு அவர்கள் பிறப்பை அறுக்க முடியும் என்ற வினாத் தோன்றுமன்றோ? அதற்கு விடையாக 'எம் தரமும் ஆட்கொண்டு’ என்கிறார்.

பிறப்பு அறுபடுவதற்குத்தான் அவர்கள் வளர்ச்சி நிலையை ஆதாரமாகக் கொள்ளவேண்டுமே தவிர, ஆட்கொள்ப்படுவதற்குத் தரம் பார்க்கவேண்டிய தேவையில்லை. அவனுடைய அருள் காரணமாகவும், வள்ளன்மை காரணமாகவும் ஆட்கொள்கிறானே தவிர, ஆட்கொள்ளப்படும் பொருளின் தரம் பார்த்து இது நடைபெறுவதில்லை. இதனை விளக்கவே எங்களுடைய தரத்தைப்பற்றிக் கவலைப்படாமல் எங்கள் அனைவரையும் ஆட் கொண்டான் என்கிறார். அவனால் ஆட்கொள்ளப் பெற்றபின் தரத்திலிருந்த வேறுபாடுகள் அனைத்தும் மறைந்து அனைவரும் ஒருநிலை அடைந்துவிட்டார்கள். ஆதலின், அவர்கள் அனைவருடைய பிறப்பையும் அறுத்தான் என்று கூறுகிறார்.

'தென்னன்’ என்பது தென்னாட்டிற்கு உரியவன் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது.

‘அறைகூவி வீடு அருளும் அம் கருணை வார்கழல்’ என்ற பகுதியில் அடிகளார் தமக்கு நேர்ந்த அனுபவத்தை நினைந்து பார்க்கிறார். வீடுபேற்றைப்பற்றி ஒரு சிறிதும் சிந்தியாமல் குதிரை வாங்கச் சென்றுகொண்டிருந்த தம்மை, வலிய இழுத்து அத்திருவடிகளைத் தந்தான் என்று கூறுகின்றார். கருணை உடையவன் தன் வார்கழலைத் தந்தான் என்பதற்குப் பதிலாக, கருணையை வார்கழல்மேல் ஏற்றி, அத்தகைய திருவடியைப் பாடிக்கொண்டே அம்மானை ஆடுவோம் என்கிறார்.