பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அறைகூவி வீடு அருளும் என்பதற்கு, குருந்த மரத்தின் அடியில் இருந்த குருநாதர் இவரை வாய்விட்டு அழைத்தார் என்று பொருள்கொள்ளத் தேவையில்லை. அவருடைய திருவருளால் திருவாதவூரர் மனத்திடைத் தோன்றிய குரலே ஆகும் அது என்பது கருத்து. இது ‘அறை கூவி ஆட்கொண்டு அருளி' (திருவாச 3-148) என்ற அண்டப்பகுதியில் விளக்கப்பெற்றுள்ளது.

176. பாரார் விசும்பு உள்ளார் பாதாளத்தார் புறத்தார்
ஆராலும் காண்டற்கு அரியான் எமக்கு எளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றி
வாரா வழி அருளி வந்து என் உளம் புகுந்த
ஆரா அமுது ஆய் அலை கடல்வாய் மீன் விசிறும்
பேர் ஆசை வாரியனைப் பாடுதும் காண் அம்மானாய் 2

பாரார்-மனிதர்கள். பேராளன்-பெருமையையாள்பவன். வாரா வழி-முத்தி, பேராசை வாரியன்-பெரிய அன்புக்கடலாக உள்ளவன்.

‘மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம், இவற்றைக் கடந்துள்ள ஏனை அண்டங்கள் ஆகியவற்றுள் எங்கே வாழ்பவர்களும், கண்ணாலும் கருத்தாலும் காண்டற்கு அரியனாய் உள்ள ஒருவன் எமக்கு எளியனாய் வந்தான். மானுட வடிவில் எளியனாய் வந்திருப்பினும் அவன் காண்டற்கு அரிய பேராளன் என்பதையும், தென்னன் என்பதையும், பெருந்துறை நாயகன் என்பதையும் யான் புரிந்துகொண்டேன். மானுட வடிவில் வந்த குருவை இவ்வாறு புரிந்துகொள்ள எனக்கு உதவியது என்னுடைய அறிவோ கல்வியோ அனுபவமோ அல்ல. குருவாக வந்தவர் முதலாவதாக எனக்குச் செய்த காரியம் என்னைப் பிச்சனாக்கியதுதான்' என்கிறார்.

‘உலகத்தார் கண்ணில் நான் பித்தனாகப் படினும் உண்மையில் நடைபெற்றது வேறு ஒன்றாகும். அந்தக்