பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திரு அம்மானை * 277


‘பிசைந்து கனியாக்கி' யவன் அக்கனியைத் 'தன் கருணை’ ஆகிய வெள்ளத்துள் அழுத்தினான்.

இன்றும்கூடப் பழம் முழுச்சுவை பெறுவதற்கும் தன் நிலை கெடாமல் நீண்ட நாள் இருப்பதற்கும் பழத்தைத் தேனுள் அமிழ்த்தி வைக்கின்ற பழக்கம் உண்டு. அதனை ‘முரபா' என்று கூறுவர்.

அதனையே இங்கு அடிகளார் ‘தன் கருணை வெள்ளத்து அழுத்தி' னான் என்கிறார்.

தேனுள் அழுத்திய பொழுது பழத்திலுள்ள குறைகள் எல்லாம் முற்றிலுமாக நீங்கிவிடுவதுபோல, கருணை வெள்ளத்துள் அழுத்தப்பெற்ற மனம், தன் குறைகளாகிய வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கிவிடுகின்றது என்பதையே ‘வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியன்’ என்கின்றார்.

‘தில்லை நகர் புக்குச் சிற்றப்பலம் மன்னும்' என்ற தொடர் மேலோட்டமாகப் பார்க்கும்போது குழப்பத்தை உண்டாக்கும். வரலாற்று அடிப்படையில் கண்டால் (திருஆலங்காட்டுத் தல புராணம்) திருஆலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய பெருமான், உடமன்யு முனிவனுக்காகத் தில்லை நகரை நிர்மாணித்து, அங்கே சிற்றம்பலத்தை உருவாக்கி, அங்கேயே ஆனந்தத் தாண்டவம் ஆடினான் என்பது விளங்கும்.

'புக்கு' என்பது புகுந்து என்று பொருள் தரும். அப்படியானால் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இவன் தில்லையில்மட்டும் இல்லாதிருந்து இப்போது புதிதாகப் புகுந்தானோ என்ற ஐயம் தோன்றுமன்றோ? இம்மாதிரி இடங்களில் புகுந்து என்ற சொல்லை, இருந்து என்ற சொல்லுக்குப் பரியாயச் சொல்லாகக் கொள்ள வேண்டும். அடிகளார் இந்தக் கருத்தில்தான் 'புக்கு' என்ற